ஊடகங்கள் தான், மனிதனையும் அவன் வழியாக உலகத்தையும் வடிவமைக்கும் ஆற்றல் கொண்ட ஆயுதங்கள். செய்தித்தாள்கள், நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் திரைப்படங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் தான் நாம் நமது உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான, நமது வாழ்க்கையையும் தீர்மானிப்பதற்கான கருவிகளாக இருக்கிறது.
ஆனால், ஊடகங்களின் உண்மையான நோக்கம் என்ன?
செய்திகளும், செய்தித்தாள்களும் நம்மை சுற்றி ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை நமக்குத் தெரியப்படுத்துவதற்காக வெளிவருகிறது என நாம் நம்புகிறோம். ஆனால், அவை, நமக்குத் தேவையான, நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை வெளியிடுகிறதா? இல்லை, அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் நமக்கு எதைத் தெரிவிக்க விரும்புகிறதோ, அந்த தகவல்கள் தான் வருகிறதா?
செய்திகளும், செய்தித்தாள்களும் எதற்காக எப்போதும் அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் நலத்திட்டங்களையும் முன்னிலைப்படுத்துகிறது? அரசின் உண்மையான செயல்பாடுகளை நம்மிடம் தெரியப்படுத்துவதற்காகவா? இல்லை, அரசாங்கம் மக்களின் நலன்களுக்காகச் செயல்படுகிறது என்ற கருத்தை நம் மனதில் ஆழமாகப் பதிய வைப்பதற்காகவா?
எந்த ஒரு ஊடகமாவது, ஊடகத்தின் எந்த ஒரு நிகழ்ச்சியாவது மக்களுடைய உண்மையான பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறதா? சமூகத்தின் அடிப்படை சிக்கல்களைப் பற்றிப் பேசுகிறதா? சமூகத்தின் சிக்கல்களுக்குப் பலியாகி குற்றம் புரியும் மனிதர்களையும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு இரையாகி தவறுகள் செய்யும் மக்களையும் பற்றித் தானே பேசுகிறது?
குற்றங்களையும் தவறுகளையும் உடனுக்குடன் சொல்லும் செய்திகள், தொடர்ச்சியாக ஒரே குற்றங்கள் தானே நடந்து கொண்டிருக்கிறது, தொடர்ச்சியாகக் குற்றங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன, இவற்றுக்கான அடிப்படை காரணங்கள் என்ன, தீர்வுகள் என்ன, தேவைப்படும் மாற்றங்கள் என்னென்ன, அவற்றை மக்களிடம் எப்படிக் கொண்டு சேர்க்க முடியும் என என்றாவது ஒரு நாளைக்காவது விவாதித்துள்ளதா?
குற்றம் மற்றும் வன்முறை செய்திகளால், இந்த உலகம் மோசமானது, மனிதர்கள் மோசமானவர்கள் என்ற சிந்தனையை விதைப்பது, நமது மனதில் வாழ்க்கை பற்றிய பயத்தை ஏற்படுத்துவதற்கு தானே? இப்படிப்பட்ட உலகத்தில், இப்படியான மனிதர்களிடம் இருந்து நம்மைப் பாதுகாப்பதற்காகத் தான் அரசாங்கம் செயல்படுகிறது என்று நம்மை நம்ப வைப்பதற்கு தானே?
இது போன்ற மறைமுக நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளத் தானே செய்திகள் ஒளிபரப்பப்படுகிறது? நாட்டில் நடந்து கொண்டிருக்கும் உண்மைகளை மறைப்பதற்கும், தேவையற்ற செய்திகளை பரபரப்பாகவும், அர்த்தமற்ற விவாதங்களை விறுவிறுப்பாகவும் நமது மனங்களில் நாம் நம்பக்கூடிய வகையில் திணிப்பதற்கும் தானே செய்திகள் வாசிக்கப்படுகின்றன?
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் போட்டிகளாக நடத்தப்படுவது, நமது மனதில், போட்டி மனப்பான்மையை உருவாக்குவதற்கு தானே? மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து நமது வெற்றி தோல்விகளை முடிவு செய்வதைப் பழக்கப்படுத்தத் தானே? போட்டிப் போட வேண்டும், முதலிடம் பிடிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் போன்ற எண்ணங்களை விதைப்பதற்கு தானே?
விளையாட்டுகள் வெவ்வேறாக இருப்பினும், அனைத்து விளையாட்டு ஒளிபரப்புகளும் நமக்குள் இதே எண்ணங்களைத் தானே விதைக்கிறது? வெற்றியை நோக்கியும், பரிசுகளை நோக்கியும் நம்மை ஓட வைத்துக் கொண்டிருப்பது தொலைக்காட்சி தான் என்று நாம் எப்போது உணரப்போகிறோம்?

பெரும்பாலான தொலைக்காட்சி தொடர்கள் நமக்குள் போட்டியையும், ஆசையையும், பயத்தையும், பொய், பொறாமை, சூழ்ச்சி, வஞ்சம் போன்ற எண்ணங்களை விதைப்பதாகத் தானே இருக்கிறது?
நம்மைச் சிந்திக்க வைக்க, நமக்கான உண்மைகளைப் பேசக்கூடிய நிகழ்ச்சிகளாக விளம்பரப்படுத்தப்படும் நிகழ்ச்சிகளும் நமது அமைப்புகளுக்குள் இருக்கும் தவறுகளின் விளைவுகளைப் பற்றி மட்டும் தானே பேசுகிறது?
மின்னணு விளையாட்டுகள் அனைத்தும் வேகமாக ஓடுவது, வெட்டுவது, குத்துவது, பொருள் சேர்ப்பது, மறுபடியும் ஓடுவது என்பதைப் போல தானே உருவாக்கப்படுகிறது? இவை, விளையாடுபவரின் மனதில் வன்முறை மற்றும் வெற்றி-தோல்வி பற்றிய சிந்தனைகளைத் திணிப்பதாகத் தானே இருக்கிறது?
திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் சில நேரங்களில் நம்மை மகிழ்விக்கச் செய்கிறது தான். ஆனால், அவை நம்மை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்படுகிறதா? இல்லை, இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கே தெரியாமல், நமது வாழ்க்கையின் சிக்கல்களையும் மனதில் இருக்கும் கஷ்டங்களையும் மறக்கடிக்கச் செய்கிறதா? நம்மைச் சிறிது நேரம் திசை திருப்பி விட்டு, மீண்டும் அதே பிரச்சனைகளைச் சந்திப்பதற்கான உற்சாகத்தை ஏற்படுத்துகிறது தானே?
திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நகைச்சுவைகள் பெரும்பாலானவை சக மனிதர்களை ஏளனப்படுத்தும் வகையிலும், மனதளவில் நம்மைக் காயப்படுத்தும் வகையிலும் தானே வருகிறது? திரைப்படப் பாடல்கள் நமது காயங்களுக்கான ஆறுதல்களாகவும், ஆராத காயங்களோடு வாழ்வதற்கு நம்மைப் பழக்கப்படுத்துகிறது தானே?
தனிப்பட்ட நிறுவனத்தையும், மனிதர்களையும், நிகழ்ச்சிகளையும், தொடர்களையும், திரைப்படங்களையும் குறை கூறுவதற்காக இந்த கேள்விகள் எழுதப்படவில்லை. சில நல்ல மனிதர்களும், திரைப்படங்களும், கருத்துகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவை நமது அமைப்பின் இயல்புகளால் ஒதுக்கப்படுகிறது தானே? மறக்கடிக்கப்படுகிறது தானே?
வியாபார தேவைகளையும், விற்பனை நோக்கங்களையும் முதன்மையாகக் கொண்டு தானே அனைத்து ஊடகங்களும் இயங்குகிறது? வணிகம் தானே நோக்கம்? விளம்பரங்களால் தானே வருமானம்?
அப்படியெனில், நாம் என்ன நினைக்க வேண்டும், எதை நம்ப வேண்டும், யாரைப் போல வாழ வேண்டும், என்ன பொருட்களை வாங்க வேண்டும், எதற்கு ஆசைப்பட வேண்டும் என்று அரசாங்கமும் அரசாங்கத்தின் மூலமாக வணிக நிறுவனங்களும் விரும்புகிறதோ, அதற்குத் தகுந்தபடி நமது சிந்தனைகளை வடிவமைக்கும் கருவியாக தானே ஊடகங்கள் செயல்படுகிறது?
தொடர்ச்சியாகக் கேள்விகள் எழுப்புவோம். கேள்விகள் தான் நம்மை சிந்திக்கச் செய்யும். சிந்திப்பதும், அதனைத் தொடர்ந்து செயலாற்றுவதும் தான் நம்மை மாற்றத்தை நோக்கி நகர்த்தும்.
வட்டத்தில் இணைந்திருங்கள். ஒன்றிணையவும், விழிப்படையவும், வட்டம்.
உண்மை. ஆழ்ந்த கருத்து.
மனமார்ந்த நன்றிகள். உணவு, மருத்துவம், கல்வி, ஊடகம், பணம் மற்றும் அரசியல் தலைப்புகளில் புதிய பதிவுகள் தொடர்ச்சியாக வெளியிடப்படும். வட்டத்தில் இணைந்திருங்கள்.வட்டத்தின் பதிவுகளை உங்களது நண்பர்களிடம் தொடர்ச்சியாகக் கொண்டு செல்லுங்கள். மாற்றத்தை நோக்கிய பயணத்தில் இணைந்து செயல்படுவோம்.