மக்களாகிய நாம் அனைவரும் அரசாங்கத்தின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் தானே? அப்படி என்றால், நாம் அனைவரும் அரசாங்கத்தின் ஆட்சிக்கு அடிபணிந்து தானே வாழ முடியும்?
நமது நாட்டின் நிலங்கள், நீர் நிலைகள், இயற்கை வளங்கள் என அனைத்தும் அரசின் உடைமைகள் தானே? அப்படி என்றால், நமது நாடு முழுவதும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தானே இயங்க முடியும்?
உணவு, கல்வி, மருத்துவம், மின்சாரம், தொழில், ஊடகங்கள், போக்குவரத்து, விளையாட்டு என அனைத்தையும் அரசியல் தானே தீர்மானிக்கிறது?
ஆனால், மக்களாகிய நாம் அனைவரும், நமது வீடு, நமது வேலை, நமது குடும்பம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம் தானே? அல்லது, நம்மைப் பற்றிச் சிந்திக்கவே நேரமில்லாமல், நமது குடும்பத்தை வழிநடத்த வருமானம் போதாமல், நமக்கு எதற்கு அரசியல் என ஒதுங்கி நிற்கிறோம் தானே?
இல்லை, லஞ்சம் வாங்குவதும், ஊழல் செய்வதும் தான் அரசியல்; அரசியல் என்பது சாக்கடை என நினைத்து அரசியலில் இருந்து தள்ளி நிற்கிறோம் தானே? இல்லை, தினமும் செய்திகள் பார்த்துவிட்டு கட்சி கதைகள் பேசிக்கொண்டு, கட்சித் தலைவர்களைப் பற்றி விவாதித்து விட்டு நமக்கு அரசியல் தெரியும் என நினைத்துக் கொண்டிருக்கிறோம் தானே?
இல்லை, தேர்தலின் போது மட்டும் அரசியலை விமர்சனம் செய்துவிட்டு, வாக்கு செலுத்தி, தனது அரசியல் கடமையை நிறைவேற்றிவிட்டோம் என அரசியலைக் கடந்து செல்கிறோம் தானே?
இதில், நாம் எதை நம்பினாலும் நம்மில் பெரும்பாலானோர் அரசியலில் இருந்து ஒதுங்கியும் அரசியலை புரிந்து கொள்ளாமலும் தானே இருக்கிறோம்?
நாம் அரசியல் மீது ஆர்வமில்லாமல் இருந்தாலும், அரசியலைத் தெரிந்து கொள்ளாமல் இருந்தாலும் அரசியல் தானே இங்குள்ள அனைத்தையும் தீர்மானிக்கிறது? இது உண்மை என்றால், நம் வாழ்வைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் அமைப்பில் இருந்து எதற்காக நாம் அனைவரும் ஒதுங்கி நிற்கிறோம்?
அரசியலில் இருந்து நாமாக ஒதுங்கி நிற்கிறோமா? இல்லை, திட்டமிட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறோமா? இது தான் அரசியல், இங்கு எதையும் மாற்ற முடியாது; அரசியல் மோசமானது, அதில் தலையிடாமல் இருப்பது தான் நல்லது என்று நம்ப வைத்து அரசியலில் இருந்து ஒதுக்கப்படுகிறோம் என்பது தானே உண்மை?
அப்படி என்றால், வேண்டுமென்றே அரசியல் மீது வெறுப்பை ஏற்படுத்த வேண்டிய காரணம் என்ன? அரசின் செயல்பாடுகளை மக்களிடம் இருந்து மறைக்க வேண்டிய காரணம் என்ன? திட்டமிட்டு, மக்களை அரசியல் அற்றவர்களாக மாற்ற வேண்டிய காரணம் என்ன?
செய்வதை மறைப்பதும், சுற்றி இருப்பவர்களைத் திசை திரும்புவதும் ஏமாற்றுபவர்களின் தந்திரங்கள் தானே? ஆமாம் என்றால், அரசியலை மக்களிடம் இருந்து மறைப்பதும், மக்களைத் தொடர்ச்சியான பரபரப்புகளால் திசைதிருப்புவதும் மக்களை ஏமாற்றுவதற்கு தானே?
மக்களை ஏமாற்றுவது, அரசியலில் நடக்கும் தவறுகளை மறைப்பதற்காகவா? ஒட்டுமொத்த அரசியலே தவறானது என்பதை மறைப்பதற்காகவா? ஆட்சியின் பெயரால், அதிகாரத்தின் பெயரால், நிர்வாகத்தின் பெயரால் நடக்கும் அனைத்துமே மக்களாகிய நமக்கு எதிரானது என்பதை நம்மிடம் மறைப்பதற்காக தானே நாம் அனைவரும் அரசியல் அற்றவர்களாக மாற்றப்படுகிறோம்?

அரசியலே நமக்கானது இல்லை என்பதால் தானே, அரசியலுக்கு அடிப்படையான அரசாங்கமும், அரசாங்கம் உருவாக்கிய சட்டமும், சட்டத்தைச் செயல்படுத்தும் நீதித்துறையும், நிர்வாகமும், காவல்துறையும் கூட மக்களுக்காக செயல்படுவதில்லை?
அப்படி என்றால், அரசு செயல்படுத்திய வேளாண் திட்டங்கள் எதுவும் விவசாயத்தையும் விவசாயிகளையும் மேம்படுத்தவில்லை, இனியும் மேம்படுத்தாது என்பது தானே உண்மை? அதனால் தானே, நவீன வேளாண் முறை உணவை நஞ்சாக்கி, மண் வளத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது?
அரசாங்கம் மக்களுக்கானது இல்லை என்பதால் தானே, நஞ்சான உணவு முறையால் உருவாக்கப்படுகிற நோய்களைக் குணப்படுத்தாமல், நமது உடல் நலத்தை உறுதி செய்யாமல், நோய்களை வைத்து வியாபாரம் செய்கிற மருத்துவ முறைக்கு அரசாங்கம் முக்கியத்துவம் தருகிறது?
அரசாங்க வழிகாட்டுதலில் இயங்கும் கல்வி முறை மாணவர்களுக்கானதாக இருக்க முடியுமா? இல்லை என்பதால் தானே, கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு உண்மைகளைத் தெரியப்படுத்தாமல், தெரிந்துகொள்ள விருப்பமில்லாமல் வளர்க்கிறது? கேள்வி கேட்பதற்கான சுதந்திரம் இல்லாமல், இருப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டு, செய்ய வேண்டியதை ஒழுக்கமாக செய்வதற்குப் பழக்கப்படுத்துகிறது?
அரசாங்கம் கட்டுப்படுத்தும் செய்தித்துறையும் ஊடகத்துறையும் அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்லுமா? மக்களுக்காகக் கேள்விகள் கேட்குமா? இல்லை என்பதால் தானே, இந்த தவறுகள் அனைத்தையும் ஊடகங்கள் நம்மிடம் இருந்து மறைக்கிறது? பயனற்ற சம்பவங்களால் நம்மை திசைதிருப்புகிறது? பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளால் நமது உணர்ச்சிகளைத் தூண்டுகிறது?
இவை அனைத்தும் இப்படியே இருப்பதற்கு முக்கியமான காரணமான பணமும் நிதி நிறுவனங்களும் கூட மக்களுக்கு எதிரானதாகத் தானே இருக்க முடியும்? பணம் தானே நம்மைச் சிந்திக்க விடாமல், சிந்திப்பதற்கான நேரமில்லாமல் நம்மை ஓடவைத்து கொண்டிருக்கிறது?
இவை அனைத்தையும் மீறி, யாராவது உண்மைகளைத் தெரிந்து கொண்டாலும், நடந்து கொண்டிருப்பதை எளிமையாகச் சொல்ல முடியாத வகையில் சிக்கலானதாகவும், சொல்வதை மக்களே நம்ப முடியாத வகையிலும் தானே, அரசியல் மக்களை மாற்றி இருக்கிறது?
அதையும் தாண்டி, மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தால், நம்மை ஒன்று சேர விடாமல், நம்முள் சண்டைகளை உருவாக்குவதற்காக தானே நமக்குள் எண்ணற்ற பிரிவுகளும் பிரிவினைகளும் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது?
இப்படிப்பட்ட சூழ்ச்சிகளால் தானே இங்கு அரசியல் நடந்து கொண்டிருக்கிறது? இந்த உண்மைகளை நம்மிடம் மறைத்து வைப்பதால் மட்டும் தானே இங்கு அரசியல் நடந்து கொண்டிருக்கிறது?
அப்படி என்றால், இப்படியான சமூக அமைப்புகளைப் பற்றி எப்போது தெரிந்துகொள்ள போகிறோம்? எப்படி இந்த உண்மைகள் அனைத்தையும் மக்கள் அனைவரிடமும் கொண்டு செல்லப் போகிறோம்?
அமைப்புகளைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ள, வட்டத்தில் இணைந்திருங்கள். உண்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வட்டத்தின் படைப்புகள் அனைத்தையும் உங்களது தொடர்புகளிடம் தொடர்ச்சியாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். விழிப்படையவும். ஒன்றிணையவும். வட்டத்தில் இணைந்திருங்கள்.