நாம் அனைவரும் சுதந்திரமாக இருப்பதாக நம்புகிறோம். தனி மனிதர்களாகவும், சமூகமாகவும் நாம் சுதந்திரமாக இருப்பதாக நாம் ஒவ்வொருவரும் நம்புகிறோம். ஆனால், உண்மையில் நாம் சுதந்திரமாக இருக்கிறோமா?
நாம் மனதில் நினைப்பதை எப்போதும், யாரிடம் வேண்டுமானாலும் பேச முடிகிறது, விருப்பமுள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் விருப்பமான பாடங்களைப் படிக்க முடிகிறது, நமக்குச் சரியெனப் படும் மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் தேர்ந்தெடுக்க முடிகிறது, பிடித்த வேலைகளுக்குச் செல்ல முடிகிறது, அதனால், சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறோம்.
நமக்கு விருப்பமான நிலம், வீடு, உடைமைகள் அனைத்தையும் வாங்க முடிகிறது; எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பயணிக்க முடிகிறது; எந்த தொழில் வேண்டுமானாலும் செய்ய முடிகிறது, எப்படி வேண்டுமானாலும் வாழ முடிகிறது; அதனால், நாம் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறோம்.
ஆனால், நடைமுறை உண்மை என்னவாக இருக்கிறது?
நமக்குப் பேச்சு சுதந்திரம் இருக்கிறது தான்; நமது வீடு, வேலை, குடும்பம், உறவுகள் பற்றி பேச முடியும். சினிமா, விளையாட்டு, வாகனங்கள், தொழில்நுட்ப கருவிகள் பற்றி விவாதிக்க முடியும்; ஆனால், அரசாங்கத்தையும் அரசியல் அமைப்பையும் கேள்விக்கு உட்படுத்த முடியுமா? அரசாங்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம் படைத்த வணிக நிறுவனங்களின் குற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியுமா?
நமக்குப் படிப்பதற்கான சுதந்திரம் இருக்கிறது தான்; வேறு வேறு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்க முடியும், நமக்கான துறைகளை தேர்ந்தெடுத்துப் படிக்க முடியும். ஆனால், அரசாங்கத்தின் கீழ் செயல்படும் பள்ளிக்கல்வி மற்றும் பல்கலைக்கழக அமைப்புகள் அங்கீகரிக்கும் கல்வி முறையிலும் தேர்வு முறையிலும் தானே படிக்க முடியும்?
நாம் விரும்பும் மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் தேர்ந்தெடுக்க முடிகிறது தான்; ஆனால், அரசாங்கத்தின் மருத்துவத் துறையிடம் அனுமதியுள்ள மருத்துவத்தைத் தானே பின்பற்ற முடியும்? அரசாங்கம் ஆங்கில மருத்துவத்திற்கு மட்டும் தானே முன்னுரிமை தருகிறது? அப்படியெனில், ஆங்கில மருத்துவத்தை மறுக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா?
நாம் வேறு வேறு வேலைகள் செய்யலாம், கூலி வேலைக்குப் போகலாம், கோடிகளில் சம்பளம் தரும் நிறுவனங்களுக்கும் வேலை பார்க்கலாம்; ஆனால், வாழ்வதற்குப் பணம் அவசியம் தேவை என்பதால், கட்டாயமாக ஏதோ ஒரு வேலைக்குச் செல்ல வேண்டும் தானே? பணம் இல்லாமல் எங்கும் வாழ முடியாது தானே? பணம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது தானே?

நிலம், வீடு, உடைமைகள் அனைத்தையும் நம்மால் வாங்க முடிகிறது தான்; ஆனால், நிலத்தை வாங்குவதற்கு அரசாங்கத்திற்கு வரியாகப் பணம் கட்ட வேண்டும் தானே? வாங்கிய பின்பு ஆண்டுக்கு ஒருமுறை வரி செலுத்த வேண்டும் தானே? வீடு கட்ட அனுமதி வாங்க வேண்டும் தானே? வீடு கட்டிய பின்பும் தொடர்ச்சியாக வரி செலுத்த வேண்டும் தானே? அனைத்தையும் முறையாகச் செய்தாலும், நமது நிலத்தை எப்போது வேண்டுமானாலும் அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ள முடியும் தானே? அப்படி என்றால் நமது நிலமும் வீடும் உண்மையில் நம்முடையதா?
எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பயணிக்க முடிகிறது தான்; ஆனால், வாகனங்கள் வாங்குவதற்கு அரசாங்கத்திற்கு வரியாகப் பணம் கட்ட வேண்டும் தானே? வாகனத்தைப் பதிவு செய்வதற்கு, வாகனங்கள் ஓட்ட அனுமதி வாங்குவதற்கு, வாகனங்களின் காப்பீட்டிற்கு, என அனைத்திற்கும் பணம் கட்ட வேண்டும் தானே? நமது நிலங்களில் நமது வரிப்பணத்தில் போடப்பட்ட சாலைகளில் நாம் பயணிப்பதற்குக் கூட சுங்கச் சாவடிகளில் பணம் கட்ட வேண்டும் தானே?
நாம் எந்த தொழிலை வேண்டுமானாலும் செய்யலாம் தான்; ஆனால், எந்த தொழில் செய்தாலும் அனுமதி பெற வேண்டும் தானே? அனுமதி பெறப் பணம் செலுத்த வேண்டும் தானே? தொழில் செய்து சம்பாரிக்கும் வருமானத்திற்கு வரி கட்ட வேண்டும் தானே? மீத வருவாயில் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் செய்யும் அனைத்து செயல்களுக்கும் வரி செலுத்த வேண்டும் தானே?
நம்மால், எப்படி வேண்டுமானாலும் வாழ முடிகிறது தான்; ஆனால், அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டுத் தானே வாழ முடியும்? அரசாங்கத்தின் சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டுத் தானே வாழ முடியும்? கட்டுப்படுவது மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக வரிகள் செலுத்த வேண்டும் தானே? பிறந்ததில் தொடங்கி, இறக்கும் வரை அனைத்து சேவைகளுக்கும் அனுமதிகளுக்கும் பணம் செலுத்துவதும் கட்டாயம் தானே? கட்டாயம் என்பதில் சுதந்திரம் எங்கிருக்கிறது?
இவற்றில் எதையேனும் மாற்றுவதற்காகக் குரல் கொடுக்கவும் செயல்படவும் நம்மில் யாருக்காவது சுதந்திரம் இருக்கிறதா? மாற்றத்திற்காகச் செயல்படச் சுதந்திரம் இல்லை என்பதால் அந்தந்த அமைப்புகளை எதிர்த்துப் போராடுவதற்கான சுதந்திரமாவது இருக்கிறதா? போராடுவதற்கும் அனுமதி வாங்க வேண்டும் தானே? அனுமதி வேண்டினாலும், மறுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது தானே? இதில் சுதந்திரம் என்பது எங்கு இருக்கிறது?
மற்றவர்களை மாற்றுவதற்கும் மக்களுக்காகப் போராடுவதற்கும் விருப்பம் இல்லை என்றால், இந்த சமூக அமைப்புகளிலிருந்து வெளியேறி நாம் தனியாகவோ குழுவாகவோ ஒரு சமூகமாகவோ வாழ்வதற்கான சுதந்திரமாவது இருக்கிறதா?
தொடக்கத்தில் எழுப்பிய கேள்வியை இப்போது மறுபடியும் எழுப்புவோம். நாம் உண்மையில் சுதந்திரமாக இருக்கிறோமா?
தொடர்ந்து இது போன்ற கேள்விகளை எழுப்புவதற்கும், மாற்றத்தை நோக்கி பயணிப்பதற்கான உரையாடல்களில் பங்கெடுப்பதற்கும் வட்டத்தில் இணைந்திருங்கள்.
உண்மையை உரக்க பேசுவதற்காகவும் மக்களை ஒன்றிணைப்பதற்காகவும் வட்டம் செயல்படுகிறது.
இந்தப் படைப்பில் உண்மை இருக்கிறது, இந்த உண்மை அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என நீங்கள் நினைத்தால், உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.