இன்றைய விவசாய முறை நம்முடைய நலன்களுக்காக இயங்கிக் கொண்டிருந்தால், நம்முடைய உணவுகள் ஆரோக்கியமானதாக இருந்திருக்கும் தானே? இன்றைய விவசாய முறை நல்ல விவசாய முறையாக இருந்தால், நமது விவசாய நிலங்கள் அனைத்தும் வளமாக இருக்க வேண்டும் தானே? விவசாயிகளின் வாழ்க்கை முன்னேறி இருக்க வேண்டும் தானே?
ஆனால், நாளுக்கு நாள் உணவினால் ஏற்படக்கூடிய நோய்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் போது, விவசாய நிலங்களின் வளங்கள் அனைத்தும் தொடர்ச்சியாகக் குறைந்து கொண்டிருக்கும் போது, விவசாயிகள் அனைவரும் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைத்து, வேறு வழி தெரியாமல் பாடுபட்டுக் கொண்டிருக்கும் போது, இன்றைய விவசாயம் மக்களாகிய நமக்கானதாக இல்லை என்று தானே அர்த்தம்?
தலைமுறை தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்த சமூகத்தில் தனது அடுத்த தலைமுறை விவசாயம் செய்வதை எந்த ஒரு விவசாயியும் விரும்பாத போது, இன்றைய விவசாயம் விவசாயிகளுக்குத் தகுந்த வருமானத்தையோ, மதிப்பையோ மரியாதையையோ, நல்ல ஒரு வாழ்க்கையையே உறுதி செய்யவில்லை என்று தானே அர்த்தம்? அப்படி என்றால், இந்த விவசாய முறை விவசாயிகளுக்கானது இல்லை என்று தானே அர்த்தம்?
பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயம் செய்து கொண்டிருந்த போது பாதுகாக்கப்பட்டு வந்த நிலத்தடி நீரின் அளவு கடந்த 60-65 ஆண்டுகளில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்குக் குறைந்து இருக்கும் போது, விவசாயத்துறையே அதற்கு முக்கிய காரணமாக இருக்கும் போது, இன்றைய விவசாய முறை நமது நிலத்தடி நீரை உறிஞ்சி விவசாயத்தை அழித்துக் கொண்டிருக்கிறது என்று தானே அர்த்தம்?
அந்தந்த வட்டாரங்களுக்குத் தகுந்த, ஒவ்வொரு பட்டத்திற்கும் ஏற்ற பயிர் வகைகளையும் கண்டறிந்து, தங்களுக்குத் தேவையான விதை ரகங்களைத் தேர்வு செய்து, சக மக்களிடம் பரவலாக்கம் செய்து, பாதுகாப்பு முறைகளை கண்டறிந்து, அவற்றை தங்கள் வாழ்வியலோடு இணைத்து வைத்திருந்த விவசாயிகளை, இன்று ஒவ்வொரு விதைப்பிற்கும் தேவையான விதைகளை வியாபாரிகளிடம் இருந்து விலைக்கு வாங்க வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது என்றால், இன்றைய விவசாய முறை விவசாயிகளுக்கானது இல்லை என்று தானே அர்த்தம்?
காலம் காலமாக விவசாயிகளிடம் இருந்த இயற்கை பற்றிய புரிதலையும், விவசாய நுட்பங்களையும், தொடர்ச்சியாகக் கைமாற்றப்பட்ட பட்டறிவையும் மறக்கடிக்கச் செய்து, எதைப் பயிரிட வேண்டும், எப்போது பயிரிட வேண்டும், என்ன மருந்தடிக்க வேண்டும் என்று வியாபாரிகளிடம் யோசனைகள் கேட்டு, விவசாயிகள் அனைவரும் விவசாயம் செய்து கொண்டிருக்கும் போது, இன்றைய விவசாயம் விவசாயிகளிடம் இல்லை என்று தானே அர்த்தம்?

கடந்த தலைமுறைகளில் விவசாயத்திற்காக எதையும் விலை கொடுத்து வாங்காமல், உணவை உற்பத்தி செய்து கொண்டிருந்த விவசாயிகளை, ஒவ்வொரு உற்பத்திக்கும் தேவையான உழவுக்காகவும், விதைகளுக்காகவும், உரங்களுக்காகவும், அறுவடைக்காகவும், உற்பத்தியை விற்பதற்காகவும், விற்ற பின்பு தன்னுடைய உணவுக்காகவும் செலவு செய்ய வைத்து, அவர்களுக்கே தெரியாமல், அவர்கள் அனைவரையும் கடனாளிகளாக மாற்றிய இந்த விவசாய முறை யாருக்கானது?
அனைத்து பயிர்களும் நன்றாக விளையக்கூடிய எங்கள் நிலங்களுக்கு எந்த இரசாயன உப்பும் வேண்டாம் என்று கூறிய விவசாயிகளை, அவர்களாகவே உப்பு இல்லை என்றால் எந்த பயிரும் ஊக்கமாக வளராது என்று சொல்ல வைத்த இந்த விவசாய முறை யாருக்கானது?
உயிர்கள் அனைத்திற்கும் இடம்கொடுத்து, உலகுக்கே உணவளித்த விவசாயிகளை அவர்கள் கைகளாலே அவர்களுடைய உணவையும் நம் அனைவருடைய உணவையும் விஷமாக மாற்ற வைத்த இந்த விவசாய முறை யாருக்கானது?
நம்முடைய உணவையும் விவசாய நிலங்களையும் விவசாயிகளையும் சீரழித்துக் கொண்டிருக்கும் இப்படிப்பட்ட விவசாய முறையை, விவசாயத்தையும் விவசாயிகளையும் மேம்படுத்தப்போகும் புரட்சி என்று அரசாங்க அமைப்புகள் எதற்காக நம்மிடம் திணித்தது? அரசாங்கம் எதற்காகத் தனது மக்களின் உணவை விஷமாக்கிக் கொண்டிருக்கும் ரசாயன நஞ்சுகளுக்கு மானியம் வழங்கிக் கொண்டிருக்கிறது?
நம்முடைய பெரும்பாலான நோய்களுக்கு, உணவில் இருக்கக்கூடிய நஞ்சுகள் தான் முக்கிய காரணமாக இருக்கிறது என்று ஏன் இன்றைய மருத்துவ உலகம் நம்மிடம் தெரிவிப்பதில்லை? உணவு விஷமாக மாறியதால் தான் நோய்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது, பெருகிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை ஏன் மருத்துவ அமைப்புகள் தொடர்ந்து மறைத்துக் கொண்டிருக்கிறது?
பசுமைப் புரட்சியின் உண்மையான நோக்கத்தையும் அவற்றின் விளைவுகளைப் பற்றியும் ஏன் நமது பள்ளிக்கூட பாடங்கள் பேசுவதுதில்லை? பஞ்சம் வந்ததாலும் மக்கள் தொகை அதிகரித்து கொண்டிருப்பதாலும், நம்முடைய உணவு தேவையைப் பூர்த்தி செய்ய இரசாயன உரங்கள் தேவை என்ற தவறான சிந்தனையைக் கல்விக்கூடங்கள் எதற்காக நமது மனங்களில் விதைத்துக் கொண்டிருக்கிறது?
கலப்பின விதைகளுக்கும் இரசாயன நஞ்சுகளுக்கும் முன்னுரிமை தந்து செய்திகளாக விளம்பரப்படுத்தும் செய்தித்தாள்களும் நாளிதழ்களும் அவற்றின் தீமைகளையும் அதன் பயன்பாட்டால் தான் விவசாயம் சீரழிந்துள்ளது, விவசாயிகள் கடனாளிகளாக இருக்கிறார்கள் என்ற உண்மைகளை ஏன் பேசுவதில்லை? முன்னணி ஊடகங்கள் அனைத்தும் பசுமைப் புரட்சியின் மறைமுக அரசியலை எதற்காக மக்களிடம் இருந்து மறைத்துக் கொண்டிருக்கிறது?
ஆக, இத்தனை அமைப்புகளும் சேர்ந்து நம்முடைய உணவை விஷமாக மாற்றி இருக்கும் போது, ஒட்டுமொத்த அமைப்பும் நமது உணவுகள் விஷம் நிறைந்ததாகவே இருக்க வேண்டும் என்று இயங்கிக் கொண்டிருக்கும் போது, விவசாயம் என்ற பெயரில் இங்கு நடக்கும் எதுவும் விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவோ, விவசாயிகளுக்காகவோ, மக்களாகிய நமக்காகவோ இயங்கவில்லை, இனியும் இயங்காது என்று தானே அர்த்தம்?
தொடர்ந்து கேள்விகள் கேட்போம், உரையாடுவோம், உண்மைகளைத் தெரிந்து கொள்வோம்.
வட்டத்தோடு இணைந்திருங்கள். விழிப்படையவும். ஒன்றிணையவும். வட்டம்.
இல்லை
இப்போது உறுதியாக இல்லை, இனியும் எப்போதும் நமக்காக இயங்கப்போவது இல்லை என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.