கல்வி மக்களுக்கானதாக இருந்தால், குழந்தைகளும் மாணவர்களும் மகிழ்ச்சியாகப் பள்ளிகளுக்குச் சென்று கொண்டிருக்க வேண்டும் தானே? இன்றைய கல்வி முறை நமக்கானதாக இருந்தால், படிப்பின் மீதும் பாடங்களின் மீதும் நமக்கு ஆர்வமும் விருப்பமும் இருக்க வேண்டும் தானே?
ஆனால், பள்ளிக்குச் செல்லும் எந்த ஒரு குழந்தையும் படிப்பின் மீது விருப்பம் இல்லாமல் பெற்றோர்களின் வற்புறுத்தலுக்காகவும், படிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்காகவும் படித்துக் கொண்டிருக்கும் போது, இன்றைய கல்விமுறை நமக்கானதாக இல்லை என்று தானே அர்த்தம்?
இன்றைய கல்வி நமக்கானதாக இருந்தால், நமது வாழ்க்கைக்கு தேவையானவற்றைப் பள்ளி கல்லூரிகளில் கற்றுத் தந்து கொண்டிருக்க வேண்டும் தானே? நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய உலகத்தையும் நமது சமூகத்தையும் மேம்படுத்துவதற்குத் தேவையான சிந்தனைகளை நமக்குள் வளர்ந்திருக்க வேண்டும் தானே? நாம் நமக்காகச் சிந்தித்து கொண்டிருக்க வேண்டும் தானே? சமூகத்தின் மீதான நம்முடைய அறிவும் பார்வையும் சரியானதாக இருந்து இருக்க வேண்டும் தானே?
ஆனால், நம்மில் பலருக்கு நமது வாழ்க்கையின் மீதான அக்கறையே இல்லாத போது, நம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற விழிப்புணர்வே இல்லாத போது, சமூக நிகழ்வுகள் பற்றிய தனிப்பட்ட பார்வையும் சிந்தனைகளும் இல்லாத போது, நம்மில் பெரும்பாலானோர் சிந்திப்பதையே விரும்பாத போது, இன்றைய கல்வி முறை, நமக்கானதாக இல்லை என்று தானே அர்த்தம்?
நம்முடைய சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டிய கல்வி, நமது தனிப்பட்ட கருத்துகளையும் சிந்தனைகளையும் பல ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தி, சிந்திப்பதையே நாம் விரும்பாதவாறு நம்மை மாற்றிக்கொண்டிருக்கும் இன்றைய கல்விமுறை, எப்படி நமக்கானதாக இருக்க முடியும்?
எதையுமே முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையை ஏற்படுத்தாமல், புரிந்துகொள்ள அனுமதிக்காமல், தேர்வுகளுக்குத் தேவையானவற்றை மட்டும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கச் செய்கின்ற இன்றைய கல்விமுறை நமக்கானதாக இருக்க முடியுமா?
நம்மை சுயமாகச் சிந்திக்க வைக்க வேண்டிய கல்விமுறை, நம் அனைவரையும் ஒரே சிந்தனைகளால் நிரப்பிக் கொண்டிருக்கும் போது, நம் அனைவரிடமும் பொதுவான கண்ணோட்டத்தை விதைத்துக் கொண்டிருக்கும் போது, அந்த சிந்தனைகளும் கண்ணோட்டங்களும் நமக்கு எதிராக இருக்கும் போது, இந்த கல்விமுறை, எப்படி நமக்கானதாக இருக்க முடியும்?
தவறான கருத்துக்களைப் புத்தகங்களில் திணித்து, புத்தகத்தில் இருப்பது தான் உண்மை என்று நம்மை நம்ப வைத்து, அனைத்தையும் தெரிந்து கொண்டோம் என்ற பிம்பத்தை நமக்குள் ஏற்படுத்தி, உண்மையான கருத்துக்களை எதிர்த்து வாதாட கூடிய வகையில் நமது சிந்தனைகளைச் செதுக்கி வைத்திருக்கும் இன்றைய கல்விமுறை, எப்படி நமக்கானதாக இருக்க முடியும்?

படித்து முடித்த பிறகு, நம்முள் எத்தனை பேர் புத்தகங்களை விரும்பக்கூடியவர்களாக இருக்கிறோம்? எத்தனை பேர் வாசிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறோம்? அப்படி என்றால், படிப்பின் மீதும் புத்தகங்களின் மீதும் வெறுப்பை ஏற்படுத்தக் கூடிய இன்றைய கல்விமுறை, எப்படி நமக்கானதாக இருக்க முடியும்?
நம்மில் பெரும்பாலானோர் படித்தவர்களாக இருந்தும் கூட, நம்மைச் சுற்றி தினந்தோறும் நடந்து கொண்டிருக்கும் அநியாயங்களை ஏன் யாரும் கேள்வி எழுப்பாமல் இருக்கிறோம்? அப்படி என்றால், நம்மிடம் இயல்பாக இருக்கும் கேள்வி கேட்கும் குணத்தையே மழுங்கடித்து, இருப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழச் செய்கிற இன்றைய கல்விமுறை, எப்படி நமக்கானதாக இருக்க முடியும்?
நம்மில் பெரும்பாலானோர் படித்தவர்களாக இருந்தும் கூட, ஏன் நாம் யாரும் நமது சமூகத்தின் மீது அக்கறையே இல்லாமல் இருக்கிறோம்? நமது ஊரையும், நமது மக்களையும் மறந்து விட்டு, நம்மையும் நமது குடும்பத்தையும் மட்டும் நினைத்து, பணம் சம்பாதிப்பதற்கு தேவையான திறன்களை மட்டும் கற்றுத்தரக்கூடிய இன்றைய கல்விமுறை நமக்கானதாக இருக்க முடியுமா?
நமது தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அறிவை வளர்க்காமல், நமது சமூகத்தில் இருக்கும் சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய திறமைகளை வளர்க்காமல், பெருநிறுவனங்களின் லாபத்திற்காக வாழ்நாள் முழுக்க உழைப்பதற்குத் தேவையான கண்ணோட்டத்தையும் சிந்தனைகளையும் நம்மிடம் திணிக்கும் இன்றைய கல்விமுறை, எப்படி நமக்கானதாக இருக்க முடியும்?
நம்முடைய உணவு பற்றியும், இன்றைய உணவு உற்பத்தி பற்றியும், உணவில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் பற்றியும், அவற்றின் தீமைகளையும், அவை ஏற்படுத்தக்கூடிய நோய்கள் பற்றியும் ஏன் நம்முடைய பாடங்களும் புத்தகங்களும் பேசுவதில்லை? நம்முடைய உணவையும் விவசாய நிலங்களையும் சீரழித்து, நமது விவசாயிகளைக் கடனாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கும் விவசாய முறையை எதற்காகப் புரட்சி என்று நமது பள்ளிக்கூடங்கள் நம்மிடம் திணித்து கொண்டிருக்கிறது?
நமது உடல் எப்படி இயங்குகிறது, நமது உடலின் தேவைகள் என்னென்ன, நோய் என்றால் என்ன, நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது எப்படி, குணப்படுத்துவது எப்படி என்பதை எல்லாம் 15 ஆண்டுக்கால பாடங்களில் நமக்குக் கற்றுக்கொடுப்பதில்லை? நோய்களைக் குணப்படுத்தாமல் லாபத்திற்காக இயங்கிக் கொண்டிருக்கும் ஆங்கில மருத்துவத்தின் பார்வையையும் கூறுகளையும் மட்டுமே அறிவியலாக ஏன் நமது கல்விமுறை நம்மிடம் திணித்து கொண்டிருக்கிறது?
நமது கல்விமுறை இப்படியாக இருக்கிறது, கல்விமுறையில் ஏன் மாற்றம் வேண்டும், மாற்றத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவது எப்படி என்பது பற்றி எல்லாம், ஏன் எந்த ஊடகங்களும் எப்போதும் பேசுவதில்லை? மதிப்பெண்களைத் தாங்கி பிடித்து, கல்வி நிறுவனங்களையும் பெரு நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளையும் வருமானத்தையும் விளம்பரப்படுத்திப் பெற்றோர்களின் மனங்களில் ஏன் இப்படியான கல்விமுறையைத் திணித்து கொண்டிருக்கிறது?
அரசாங்கம் எதற்காக இப்படிப்பட்ட கல்விமுறைக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது? அரசாங்கம் ஏன் இப்படியான பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும்? அரசாங்கம் எதற்காக இந்த கல்விமுறையைப் பொதுக்கல்வி திட்டங்களிலும் வேலைவாய்ப்புக்கான தகுதிகளிலும் கட்டாயப்படுத்துகிறது? எதற்காக அனைத்து அரசாங்க கட்சிகளும் இதே கல்விமுறை நம் மீது திணித்துக் கொண்டிருக்கிறது?
காரணங்கள் என்னவாக இருந்தாலும், இந்த கல்விமுறை நமது வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கற்றுக்கொடுக்கவில்லை, இனியும் கற்றுக்கொடுக்காது என்பது தானே உண்மை?
இன்றைய கல்விமுறை நமக்குச் சிந்திக்கக் கற்றுத்தரவில்லை, நமக்காகச் சிந்திக்க கற்றுத்தரவில்லை, கேள்வி எழுப்பக் கற்றுத்தரவில்லை, இனியும் கற்றுக்கொடுக்காது என்பது தானே உண்மை? இன்றைய கல்விமுறை நமக்கானதாக இல்லை, இனியும் இது நமக்காக இயங்காது என்பது தானே உண்மை?
நம்மை நமக்காகச் சிந்திக்க வைப்பதற்காகவும், நமது வாழ்க்கையை மாற்றுவதற்குத் தேவையான கேள்விகளை எழுப்புதற்காகவும் வட்டத்தில் இணைந்திருங்கள். தொடர்ச்சியாக உரையாடுவோம்.
விழிப்படையவும். ஒன்றிணையவும். வட்டம்.