ஊடகங்கள் நமக்கானதாக இருந்தால், நமக்கு தேவையான தகவல்களையும், நமது வாழ்க்கைக்கு பயன்தரக்கூடிய செய்திகளையும் வெளியிட்டுக் கொண்டிருக்க வேண்டும் தானே? இன்றைய ஊடகங்கள் நமக்கானதாக இருந்தால், நாம் அனைவரும் சமூக அக்கறையோடும் பொறுப்போடும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும் தானே?
ஆனால், நமக்கு தேவையற்ற நிகழ்வுகளையும் பயனற்ற செய்திகளையும் நம்மிடம் விறுவிறுப்பாக திணித்துக்கொண்டிருக்கும் போது, நம்மில் பெரும்பாலானோர் சமூகத்தின் மீது எவ்வித அக்கறையும் பொறுப்பும் இல்லாமல், பரபரப்பாக அலைந்து கொண்டிருக்கும் போது, இன்றைய ஊடகங்கள் எதுவும் நமக்காக செயல்படுவதில்லை என்று தானே அர்த்தம்?
அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, நம்மிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, நம்முடன் இணைந்து, அரசாங்கத்தை கேள்வி கேட்க வேண்டிய ஊடகங்கள், அரசாங்கத்தின் தவறுகளை மூடி மறைப்பதற்காக நம்மிடம் அர்த்தமற்ற விவாதங்களைத் திட்டமிட்டு திணித்துக் கொண்டிருக்கும் போது, இன்றைய ஊடகங்கள் யாருக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது?
அரசாங்கத்தின் திட்டங்களுக்கும் முடிவுகளுக்கும் பின்னால் இருக்கும் மறைமுக காரணங்களைக் கண்டறிந்து, மக்களிடம் தெரிவித்து, மக்களுக்கு எதிரான திட்டங்களில் மக்களுடைய எதிர்ப்பில் பங்கெடுக்க வேண்டிய ஊடகங்கள், மக்கள் போராட்டங்களில் கூட, அரசாங்கத்தின் பக்கம் நின்று மக்களாகிய நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும் போது, இன்றைய ஊடகங்கள் நமக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தானே அர்த்தம்?
அர்த்தமற்ற அரசியல் செய்திகளால், நம் அனைவரையும் அரசியலை வெறுக்கச் செய்து, திரைப்படங்கள், நாடகங்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளின் மீது நமது சிந்தனைகளைத் திசை திருப்பி, நம்மை நமது சமூகத்தின் மீது அக்கறை அற்றவர்களாக மாற்றிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் எப்படி நமக்கானதாக இருக்க முடியும்?
நமக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் அநியாயங்களில் இருந்து நம்மைத் திசைதிருப்புவதற்காக இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் எப்படி நமக்காக செயல்படும்?
புகை பிடிப்பதையும், மது அருந்துவதையும், சண்டை போடுவதையும் வீரமான செயல்களாகக் காட்சிப்படுத்தும் திரைப்படங்கள், எப்படி நமக்கானதாக இருக்க முடியும்? வெள்ளை நிறத்தையும், கவர்ச்சியான ஆடைகளையும், ஆடம்பரமான வாழ்வியலை மட்டுமே அழகு என காட்சிப்படுத்தும் திரைப்படங்கள், எப்படி நமக்கானதாக இருக்க முடியும்?
நம்முடைய உண்மையான குணத்தை மறைத்து, போலியாகப் பழகுவதையும், பொறாமை எண்ணங்களையும், பழிவாங்கும் குணங்களையும் உணர்வுப்பூர்வமாக நமக்குள் விதைத்துக் கொண்டிருக்கும் நாடகங்கள், எப்படி நமக்கானதாக இருக்க முடியும்?
கேள்வி எழுப்பி உலகத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் குழந்தைகளின் ஆழ்மனதில், இயங்கிக்கொண்டிருக்கும் உலகத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான பார்வையையும் சிந்தனைகளையும் விதைத்துக்கொண்டிருக்கும் கேளிக்கை சித்திரங்கள், எப்படி நமக்கானதாக இருக்க முடியும்?
ஓடுவது தான் வாழ்க்கை, வேகமாக ஓடினால் தான் வெற்றி, வெற்றி பெற்றால் தான் பணமும் பரிசும் வளர்ச்சியும் என்ற சிந்தனையை நம்முடைய மனங்களில் ஆழமாக திணித்து கொண்டிருக்கும் மின்னணு விளையாட்டுக்கள், எப்படி நமக்கானதாக இருக்க முடியும்?
நமக்குள் பிரிவினையை விதைத்து, போட்டி மனப்பான்மையை உருவாக்கி, விளையாட்டைத் தேசப்பற்றாக மாற்றி, நமது உணர்ச்சிகளைத் தூண்டி, நாட்டில் நடக்கும் அநியாயங்களை எல்லாம் மறக்கச் செய்து, விளையாட்டில் வெற்றிபெற்றால், நமது நாடு சிறந்த நாடு என்ற பெருமையை நமக்குள் திணித்துக்கொண்டிருக்கும் விளையாட்டு ஒளிபரப்புகள், எப்படி நமக்கானதாக இருக்க முடியும்?

ஒரு பொருள் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது, மூலப்பொருட்கள் என்னென்ன, பக்கவிளைவுகள் என்னென்ன, போன்ற உண்மைகள் எதையும் தெரியப்படுத்தாமல், அழகான விளம்பரங்களால் ஆசையை தூண்டி, ஆரோக்கியமற்ற, அவசியமற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விழிப்புணர்வில்லாத நுகர்வோராக நம்மை மாற்றிக் கொண்டிருக்கும் விளம்பரங்கள், எப்படி நமக்கானதாக இருக்க முடியும்?
இன்றைய விவசாய முறை நமக்கு நல்ல உணவளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதில்லை; நம்முடைய உணவுகள் அனைத்தும் விஷமாக மாறி, நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று கொண்டிருக்கிறது என்பதை ஏன் எந்த ஊடகங்களும் பேசுவதில்லை? இன்றைய விவசாயம், நம்மை நோயாளிகளாகவும், விவசாயிகளைக் கடனாளிகளாகவும், விளை நிலங்களைத் தரிசு நிலங்களாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை ஏன் நம்மிடம் இருந்து மறைத்து கொண்டிருக்கிறது?
இன்றைய மருத்துவ முறை, நமது நோய்களை குணப்படுத்துவதாகச் சொல்லி, மருத்துவமனைகளையும் மருந்துகளையும் மட்டுமே நம்பி வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்பதை ஏன் எந்த ஊடகங்களும் நம்மிடம் தெரிவிப்பதில்லை? மருத்துவத்தின் பின்னால் உள்ள சந்தை மதிப்பையும், வியாபாரத்தையும் எதற்காக ஊடகங்கள் நம்மிடம் இருந்து மறைத்து கொண்டிருக்கிறது?
இன்றைய கல்விமுறை நமக்காகச் செயல்படுவதில்லை, கல்விமுறையில் ஏன் மாற்றம் வேண்டும், மாற்றத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவது எப்படி என்பது பற்றி எல்லாம், ஏன் எந்த ஊடகங்களும் எப்போதும் பேசுவதில்லை? நமக்குச் சிந்திக்கக் கற்றுத்தர வேண்டிய கல்விமுறை, பல ஆண்டுகளாக நமது சிந்தனைகளைக் கட்டுப்படுத்தி, சிந்திப்பதையே நாம் விரும்பாதவாறு நம்மை மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதை ஏன் அனைத்து ஊடகங்களும் மறைத்துக் கொண்டிருக்கிறது?
நம்முடைய குரலாகச் செயல்பட வேண்டிய ஊடக நிறுவனங்கள் அனைத்தும், அரசாங்கத்தின் குரலாகவும், அரசியல்வாதிகளின் குரலாகவும், அதிகாரத்தின் குரலாகவும், வணிக நிறுவனங்களின் குரலாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது, நாம் எதற்காக ஊடகங்கள் நமக்காகச் செயல்படுகிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்?
ஆக, நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கக்கூடிய உணவு, மருத்துவம், கல்வி, அரசியல் போன்ற எந்த துறைகளை பற்றிய எந்த உண்மைகளையும், எந்தவொரு ஊடகமும் நம்மிடம் இதுவரை தெரிவிக்கவில்லை, இனியும் தெரிவிக்காது என்று தானே அர்த்தம்?
ஊடகங்கள் நம்மிடம் மறைத்துக்கொண்டிருக்கும் உண்மைகளைத் தெரிந்துகொள்ளவும், நமக்கான மாற்றத்தை நோக்கி பயணிப்பதற்குத் தேவையான உரையாடல்களில் பங்கெடுக்கவும், வட்டத்தோடு இணைந்திருங்கள். இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்களுடைய நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.