நெறிமுறைகள்

கருத்து பரிமாற்ற நெறிமுறைகள்

வட்டம் உங்களது கருத்துக்களை வரவேற்கிறது. கட்டுரைகள் பற்றிய நாம் ஒவ்வொருவருடைய பார்வையும் வெவ்வேறாக இருக்கும் என்பதை வட்டம் உணர்கிறது. அதனால், எங்களது சிந்தனைகளை நியாயப்படுத்தும் கருத்துக்களை வரவேற்கும் அதே மனதுடன் எதிர்வாதங்களையும் வட்டம் வரவேற்கிறது. ஆனால், எங்களது கண்ணோட்டத்தில் இருந்து நீங்கள் எப்படி வேறுபடுகிறீர்கள், எதனால் வேறுபடுகிறீர்கள் என்பதைத் தெளிவாகப் பதிவு செய்யுங்கள்.

நமது கண்ணோட்டத்தையும் நமது கண்ணோட்டத்திற்குப் பின்னால் இருக்கும் காரணங்களையும் வெளிப்படுத்துவதன் மூலமாகத் தான் நமது சிந்தனைகள் செயல்படும் விதத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஒரே கருத்தை நாம் ஒவ்வொருவரும் எப்படி வெவ்வேறாகப் பார்க்கிறோம், புரிந்துகொள்கிறோம் என்பதைக் கற்றுக்கொள்ள முடியும். கூடுதலாக, அது மட்டுமே நமது உரையாடல்களை அர்த்தமுள்ளதாக மாற்றும்.

  • உங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் போதும் உரையாடலைத் தொடரும் போதும் மென்மையான மொழியைக் கையாளுங்கள்.
  • விவாத தலைப்புக்குப் பொருத்தமான கருத்துக்களை மட்டும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
    கருத்துக்களை பரிமாற்றிக்கொள்ளும் போது யாரையும் அவமதிக்காதீர்கள். எப்போதும் தரக்குறைவாகப் பேசாதீர்கள்.
  • கருத்துகளையும் சிந்தைகளையும் பற்றி விவாதியுங்கள். உங்களது கருத்துக்களை எதிர்க்கும் மனிதர்களைப் பற்றி விவாதிக்காதீர்கள்.
  • முகம் சுளிக்கக்கூடிய, மனதைக் காயப்படுத்தக்கூடிய மொழியைப் பயன்படுத்த வேண்டாம்.
    தவறாக வழிநடத்தக்கூடிய கருத்துக்களையும் அவதூறான கருத்துக்களையும் பரப்பாதீர்கள்.
  • ஆபாசமான, அச்சுறுத்தக்கூடிய, துன்புறுத்தக்கூடிய, தீங்கு விளைவிக்கக்கூடிய வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். சாதி, மத, பாலியல் பாகுபாடுகளைக் குறிப்பிடும் வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.
  • இது விளம்பரத்திற்காக இடம் இல்லை. அதனால், தனிநபர் விளம்பரங்களையும், உங்களது பொருட்கள் மற்றும் சேவைகளை இங்கு விளம்பரப்படுத்த வேண்டாம்.
  • உங்களின் தனிப்பட்ட தகவல்கள் எதையும் பொதுவெளியில் சமர்ப்பிக்க வேண்டாம்.
  • ஒரு கருத்தை ஒருமுறை மட்டுமே வெளிப்படுத்துங்கள். ஒரே மாதிரியான அல்லது ஒத்த கருத்துக்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டாம்.
  • தவறான செய்திகளையும் சம்மந்தமற்ற கருத்துகளையும் கொண்டு விவாத தளத்தை நிரப்பாதீர்கள்.

அனைவருக்குமான பொது வெளியில் உரையாடக்கூடிய தளத்தில் நீங்கள் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்க. எனவே, ஆக்கப்பூர்வமாக உரையாடல்களால் இணைந்திருப்போம்.

படைப்புக்களைச் சமர்ப்பிக்கும் வழிமுறைகள்

வட்டத்தின் படைப்புகள் அனைத்தையும் ஆழமாக வாசியுங்கள்.

எங்களுடைய கண்ணோட்டத்தைப் புரிந்து கொள்ளுங்கள். எங்களுடைய மொழியையும் குரலையும் உள்வாங்கினால் கூடுதல் சிறப்பு. வட்டத்தின் நோக்கங்களுக்குப் பொருந்தக்கூடிய படைப்புகளை உருவாக்குங்கள். வட்டத்தில் இணைந்து இருப்பவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய படைப்புகளை உருவாக்குங்கள்.

மக்களின் கண்ணோட்டத்தை மாற்றியமைக்கக்கூடிய, தங்களது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அரசியல் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்ள உதவக்கூடிய, மனித நம்பிக்கைகளை வடிவமைக்கும் சமூகச் சூழலைக் கேள்வி எழுப்பக்கூடிய, மாற்றத்திற்கு உதவக்கூடிய, வழிகாட்டக்கூடிய படைப்புகளை அனுப்புங்கள்.

இயற்கை வேளாண்மை, உடல்நலம், மருத்துவம், சூழலுக்கு உகந்த கட்டுமானங்கள், வாழ்வியல் கல்வி, அறம் சார்ந்த வணிகம், சமூகப் பொறுப்புள்ள கலைப் படைப்புகள், பூமியில் மனித இனத்தைப் பாதுகாக்கச் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் என நீடிக்கக்கூடிய வாழ்வியல் நெறிகளுக்குத் தேவையான பல்வேறு தலைப்புகளில் உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்கலாம்.

உங்களது படைப்புகள் திருத்தப்படலாம், மற்ற கட்டுரைகளுடன் இணைக்கப்படலாம், எங்களது தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்க. உங்களது தலைப்புகளையும், புகைப்படங்களையும் (ஏதேனும் இருந்தால்) மாற்றப்படலாம்.

தனிநபர் மற்றும் தனி நிறுவன விளம்பரங்களையோ, வியாபார நோக்கத்திற்காக எழுதப்பட்ட ஆதரவுக் கட்டுரைகளையோ வட்டம் வெளியிடாது என்பதை நினைவில் கொள்க.

உங்களது படைப்பு மட்டும் தான் வெளியிடப்படும், உங்களது பெயரும், உங்களைப்பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படாது என்பதையும் நினைவில் கொள்ளவும்.

உங்கள் படைப்புகளை நாங்கள் விரைவாகவும் எளிமையாகவும் தேர்வு செய்யக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

  •  உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள். உங்களது சுய விவரங்களையும், உங்களின் சமூக கண்ணோட்டத்தையும் சுருக்கமாக அனுப்புங்கள்.
  • உங்களது சமூக ஊடக கணக்குகளை அனுப்புங்கள்.
  • எங்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவையெனில், உங்களைத் தொடர்புகொள்ள, உங்களது தொடர்பு எண்ணை அனுப்புங்கள்.
  • உங்களது படைப்புகளுக்கு நீங்கள் சில தலைப்புகளையும், புகைப்படங்களையும் பரிந்துரைக்கலாம்.
    ஏற்கனவே, வேறு எங்கேனும் வெளியிடப்பட்டுள்ள படைப்புகளை அனுப்புவதாக இருந்தால், அதன் இணையதள முகவரியையும், எங்களுக்கு அதனை மறுவெளியீடு செய்ய அனுமதிக்கிறீர்களா என்பதையும் குறிப்பிடுங்கள்.
  • படைப்பு எனக் குறிப்பிட்டு, உங்களது தலைப்பையும் பொருளாகச் சேர்த்து, contact@vattam.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

வட்டத்தின் பயணத்தில் இனைந்து கொண்டதற்காகவும் உங்களது பங்களிப்பிற்காகவும் வட்டம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறது. எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றி, மக்களின் சிந்தனைகளை உயர்த்தி, உலகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் உங்களை வட்டம் வணங்குகிறது.

தன்னார்வலர் வழிகாட்டுதல்கள்

எங்களது படைப்புகளுக்காக உதவக்கூடிய தன்னார்வலர்களை வட்டம் வரவேற்கிறது.

எங்களது சிந்தனைகளிலும் செயல்பாடுகளிலும் உங்களுக்கு உடன்பாடு இருந்தால், மாற்றத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கக்கூடிய திறமை உங்களிடம் இருப்பதாக நீங்கள் நினைத்தால், உங்களோடு இனைந்து பணிபுரிவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

சிந்தனைகளைச் சிறப்பான முறையில், எளிய மொழியில் எழுதக்கூடிய திறமை இருந்தால், படைப்புகளை மொழிபெயர்க்கக்கூடிய திறமை இருந்தால், மனதை ஈர்க்கும் ஓவியங்கள் வரையும் திறமை இருந்தால், ஓவியங்களைக் கணினியில் வரையக்கூடிய திறமை இருந்தால், புகைப்படங்கள்/ காணொளிகள் உருவாக்க முடிந்தால், சமூக வலைத்தளங்களில் எங்களது படைப்புகளை அனைவரிடமும் கொண்டு சேர்க்கக்கூடிய திறமை இருந்தால் உங்களின் வருகை எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

உங்களது சுயவிவரங்கள், திறமைகள், உங்களுடைய முந்தைய படைப்புகள், சமூக ஊடக கணக்குகள், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை இணைத்து உங்களின் விண்ணப்பத்தை contact@vattam.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

உங்களது திறமைகளைப் பறைசாற்றும் விதத்தில் வட்டத்திற்கு உதவக்கூடிய ஒரு சிறிய படிப்பை உருவாக்கி இணைத்தால், உங்களின் விண்ணப்பத்தைத் தேர்வுசெய்வதற்கு எளிமையாக இருக்கும்.

தன்னார்வலர் என்று மின்னஞ்சலுடைய பொருளின் தொடக்கத்தில் குறிப்பிடுவது உங்களது விண்ணப்பங்களை வகைப்படுத்தித் தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும்.