நமது கல்விமுறை நமது குழந்தைகளின் அறிவை வளர்ப்பதற்காக செயல்படுகிறது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். பள்ளிகளும் ஆசிரியர்களும் நமது அறிவை வளர்ப்பதாக நம்புகிறோம்.
அறிவை வளர்த்துக் கொள்வதற்காகத் தான் நாம் படிப்பதாக நினைக்கிறோம். அதனால் தான், நாம் அனைவரும் நமது குழந்தைகள் படிக்க வேண்டும் என விரும்புகிறோம். நாம் படிக்கும் போது கூட நமது அறிவை வளர்ப்பதற்குத் தான் பள்ளிக்கு செல்வதாக நினைத்தோம்.
ஆனால், நாம் எதற்காகப் படிக்கிறோம்? எதற்காக நமது குழந்தைகளைப் பள்ளிக்கும் கல்லூரிகளுக்கும் அனுப்புகிறோம்? உண்மையில் நாம் அனைவரும் நமது பெற்றோர்களுக்காக தானே படித்தோம்? தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக தானே நாம் படித்தோம்? நடைமுறையில், நாம் அனைவரும் நிறைய மதிப்பெண்கள் எடுப்பதற்காக தானே படிக்கிறோம்? முதல் மாணவனாக வர வேண்டும் என்று தானே படிக்கிறோம்?
இதில் என்ன தவறு இருக்கிறது? படிக்கும் போதும், தேர்வுகளில் வெற்றி பெரும் போதும், நமது அறிவு வளர்கிறது தானே என நினைக்கலாம். ஆனால், எது உண்மையான அறிவு என்பதை பற்றி நாம் யாரும் சிந்திப்பதில்லை. படிப்பதைப் பல கண்ணோட்டங்களில் சிந்தனை செய்து, கேள்விகள் எழுப்பி உண்மையை உணர்ந்து கொள்வது தானே அறிவு?
அப்படி என்றால், ஒரு கருத்தை வெவ்வேறு கண்ணோட்டங்களில் பார்ப்பதற்கான நேரத்தையும் சுதந்திரத்தையும் பள்ளிகள் வழங்குகிறதா? மாணவர்கள், தங்களைக் கேள்வி கேட்பதை ஆசிரியர்கள் வரவேற்கிறார்களா? ஆசிரியர்கள் சொல்வதை அப்படியே உள்வாங்கிக் கொள்வதும், புத்தகத்தில் இருப்பதை மனப்பாடம் செய்து தேர்வுகளில் அப்படியே எழுதுவதும் எப்படி அறிவாகும்?
படிப்பதைக் கேள்விகள் கேட்டு, வெவ்வேறு பார்வையில் சிந்தனை செய்து, உண்மைகளை சுயமாகப் புரிந்து கொள்வது தானே அறிவு? அப்படி என்றால், நமது கேள்விகளிலிருந்து பாடங்கள் தொடங்குகிறதா? இல்லை, பாடங்களிலிருந்து நமக்குக் கேள்விகள் கேட்கப்படுகிறதா?
நாம் பாடங்களைப் படிக்கும் போது, எதையோ புதிதாக கற்றுக்கொள்ளப் போகிறோம் என்ற ஆர்வத்தில் படிக்கிறோமா? சிறு வயதிலிருந்தே, சிந்திப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாலும், கேள்வி கேட்பதற்கான சுதந்திரம் பறிக்கப்படுவதாலும், நாம் விருப்பமின்றி கடமைக்காகத் தானே படிக்கிறோம்?
நிறைய ஆண்டுகளாக, விருப்பம் இல்லாமல் நம்மை கட்டாயப்படுத்திப் படிக்க வைக்கப்படுவதால் தானே, நமது வாழ்நாள் முழுவதும் படிப்பதற்கும் வாசிப்பதற்கும் புதிதாக எதையாவது கற்றுக்கொள்வதற்கும் விருப்பம் இல்லாமல் இருக்கிறோம்? தொடர்ச்சியாக இப்படிப்பட்ட கல்வி முறையில் படிப்பதால் நாம் ஆர்வம் இல்லாமல் இருக்கிறோமா? இல்லை, ஆர்வமில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நமது கல்வி முறை இவ்வாறாக உருவாக்கப்பட்டு இருக்கிறதா?
நாம் நினைப்பதையும் நமது கருத்துக்களையும் தெளிவாக வெளிப்படுத்துவது தானே அறிவு? நமது அறிவையும் நமது திறமைகளையும் தீர்மானிப்பதற்குத் தான் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என நம்புகிறோம்.
ஆனால், நாம் புரிந்து கொண்டதை வெளிப்படுத்துவதற்காகத் தேர்வுகள் நடத்தப்படுகிறதா? அல்லது, புத்தகத்தில் இருப்பதை அப்படியே எழுதுவதற்காக நடத்தப்படுகிறதா? நாம் தேர்வுகள் எழுதும் போது நமது திறமைகளை வெளிப்படுத்தும் விருப்பத்தில் எழுதுகிறோமா? இல்லை, புத்தகத்தில் இருப்பதை அப்படியே எழுத வேண்டும் என்ற கட்டாயத்தில் எழுதுகிறோமா?

பாடங்களைப் புரிந்து கொண்டு நமது வார்த்தைகளில் எழுதினால், தேர்வுகளில் முழு மதிப்பெண்கள் கிடைக்காது எனத் தெரிந்து தேர்வுகளுக்கு முதல் நாள் அனைத்தையும் மனப்பாடம் செய்து தானே எழுதுகிறோம்? முதல் நாள் படித்ததை மறந்துவிட்டுத் தானே அடுத்த நாள் தேர்வுக்கு மனப்பாடம் செய்கிறோம்?
கேள்விகளுக்காக மட்டுமே படிப்பதால், அதிலும் முக்கியமான கேள்விகளுக்கு மட்டுமே தொடர்ச்சியாகப் படிப்பதால் தானே, எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமல் இருக்கிறோம்? அப்படி என்றால், எதையும் ஆழமாகத் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக தானே கேள்வி பதில்களின் அடிப்படையில் பாடங்களும் தேர்வுகளும் நடத்தப்படுகிறது?
நடத்தப்படும் தேர்வுகள் நமது சிந்தனைகளை அமைதிப்படுத்துகிறதா? இல்லை, நமது கருத்துகளையும் கண்ணோட்டங்களையும் இயல்பாக வெளிப்படுத்துவதற்கான பயத்தை நமது மனங்களில் விதைப்பதற்காக நமது தேர்வுகள் இவ்வாறாக வடிவமைக்கப்பட்டுள்ளதா?
அப்படியெனில், கல்வி என்பது அறிவை வளர்ப்பதற்காக என நம்ப வைக்கப்பட்டு, புத்தகங்களில் இருப்பவற்றை அப்படியே உண்மையென நம்ப வைப்பதற்காகவும், அதற்காக நம்மைப் பழக்கப்படுத்துவதற்காகவும் தானே படிக்க வைக்கப்படுகிறோம்?
ஆக, நம்மை சுயமாகச் சிந்திக்க வைக்க வேண்டிய நமது கல்விமுறை, நம்மை ஒரே கண்ணோட்டத்தில் கொண்டுவந்து, நமது சிந்தனைகளைச் செதுக்குவதற்கும், நமது பார்வைகளை சுருக்குவதற்கும் தானே செயல்படுகிறது?
அப்படி என்றால், இந்த கல்வி முறை, நமது குழந்தைகளை அறிவாளிகளாகவும் புத்திசாலிகளாகவும் வளர்ப்பதில்லை என்பது தானே உண்மை? மாறாக, தனித்தன்மை கொண்ட நமது மனங்களை ஒரே கருத்துக்களால் நிரப்புவதற்காகவும், நமது இயல்புகளை அழித்து அனைவரிடமும் பொதுப் புத்தியை உருவாக்குவதற்காகவும் செயல்படுகிறது என்பது தானே உண்மை?
அப்படி என்றால், இதற்குப் பெயர் கல்வியா ? மூளைச்சலவையா?
நம்முள் கேள்விகள் கேட்போம். கேள்விகள் தான் நம்மை சிந்திக்கச் செய்யும். சிந்திப்பதும், அதனைத் தொடர்ந்து செயலாற்றுவதும் தான் நம்மை மாற்றத்தை நோக்கி நகர்த்தும்.
உண்மையை உரக்கப் பேசுவதற்காகவும் மக்களை ஒன்றிணைப்பதற்காகவும் வட்டம் செயல்படுகிறது. விழிப்படையவும். ஒன்றிணையவும். வட்டம்.