விவசாயம் என்பது உணவு உற்பத்தியைச் சார்ந்தது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். ஆனால், உணவை உற்பத்தி செய்வது தான் இன்றைய விவசாய முறையின் நோக்கமாக இருக்கிறதா? உண்மையாகவே, இன்றைய விவசாயம் உணவைத் தான் உற்பத்தி செய்கிறதா?
உணவு என்றால் என்ன? உயிர்களின் இருப்பிற்கும், இயக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பது தானே உணவு? இன்றைய உணவு நமது உடலையும் உயிரையும் வளர்க்கிறதா? வளர்க்கிறது என்றால், ஆரோக்கியமாக வளர்க்கிறதா?
இன்றைய வேளாண் முறையில், அனைத்து உணவுப்பொருட்களும், ரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் களைக்கொல்லிகளையும் தெளித்துத் தானே பயிரிடப்படுகிறது? கிராமங்களில், அவற்றைப் பயன்படுத்தித் தானே, தற்கொலை முயற்சிகளும் மரணங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது?
அப்படி என்றால், அவை நம் உயிரைக் கொல்லக்கூடிய விஷம் என்று தானே அர்த்தம்? அவற்றை உணவில் தெளிப்பதால், அவை நமது உடல்நலத்தைத் தொடர்ச்சியாக கெடுத்துக் கொண்டிருக்கிறது; நமது உயிரை மெதுவாக பறித்துக் கொண்டிருக்கிறது என்பது தானே உண்மை?
உண்மை என்றால், உயிரை கொல்லக்கூடிய விஷத்தை எதற்காக உணவில் தெளிக்க வேண்டும்?
விவசாயத்தை வளர்க்கவா? விவசாயிகளை முன்னேற்றுவதற்காகவா? இல்லை, விவசாய நிலங்களை வளமாக்கவா? அப்படி என்றால், இன்று விவசாயம் வளர்ந்துவிட்டதா? விவசாயிகள் முன்னேறிவிட்டார்களா? இல்லை, விவசாய நிலங்கள் தான் வளமானதாக மாறிவிட்டதா?
இல்லை, உணவு உற்பத்தியை அதிகமாக்கி, நாட்டின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காகவா? அப்படி என்றால், நாட்டின் உணவு தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடைந்து விட்டதா? வெளிநாடுகளிலிருந்து எந்த உணவுப் பொருளையும் இன்று நாம் இறக்குமதி செய்வதில்லையா? அப்படி செய்தாவது, நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவு உறுதி செய்யப்பட்டுள்ளதா?
இல்லை என்றால், விஷத்தை எதற்காக உரம் என்று சொல்லி விற்க வேண்டும்? விஷத்தை எதற்காக மருந்து என்று விளம்பரப்படுத்த வேண்டும்? இந்த விஷங்களை எதற்காக தொடக்கத்தில் இலவசமாக வழங்க வேண்டும்? அந்த இலவசங்களால், உயிரைக் கொல்லக்கூடிய விஷத்தை எதற்காக நம் அனைவருடைய உணவிலும் கட்டாயமாக்க வேண்டும்?
உணவில் விஷம் என்பதைத் தாண்டி, விஷம் இல்லாத உணவே இல்லை என்பது தானே இன்றைய நிலைமை? விளை நிலங்களில் தெளிக்கும் விஷங்கள் போதாது என்று விதைகளே இன்று விஷமாக மாறிவிட்டது தானே? அதுவும் போதாதென்று போக்குவரத்திலும் விற்பனையிலும் கெட்டுப்போகாமல் பாதுகாக்க, ருசியை அதிகமாக்க, தொடர்ச்சியாக உட்கொள்வதற்கான போதைக்காக என இன்னும் எத்தனை ரசாயன விஷங்கள் நமது உணவுகளில் சேர்க்கப்படுகின்றன? அவை ஒவ்வொன்றும் நமது உடலுக்கு எத்தனை எத்தனை துன்பங்களை தருகின்றன?

அத்தியாவசியமற்ற புகையிலை பொருட்களிலும் மது பாட்டில்களிலும், இவை உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும்; புற்றுநோயை உண்டாக்கும், போன்ற எச்சரிக்கைகள் கட்டாயமாகிவிட்ட நிலையில், அனைவரது அத்தியாவசிய தேவையான உணவுப் பொருட்கள் அனைத்திலும் விஷம் கலந்திருக்கும் போது, ஏன் எவ்வித எச்சரிக்கைகளும் அவை ஏற்படுத்தக்கூடிய உடல்நலக்கேடுகளும் எந்த உணவு விற்பனையின் போதும் வெளியிடப்படுவதில்லை?
வெளியிடுவதென்றால் என்னவென்று வெளியிடுவது? உங்கள் உணவுகள் அனைத்திலும் விஷம் இருக்கிறது. அவை உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் அனைத்து விதமான நோய்களையும் ஏற்படுத்தக்கூடியவை என்றா?
உணவுகள் அனைத்திலும் விஷம் இருப்பது தான் நம் அனைவருக்கும் தெரிந்தது தானே என நினைக்கலாம். ஆனால், நமது உணவுகளில் உள்ள விஷங்கள் தான் நமது நோய்களுக்கும் உடல்நல சீர்கேடுகளுக்கும் முக்கியமான காரணமாக இருக்கிறது எனச் சிந்திக்கிறோமா?
பிறந்த குழந்தைகளும் எவ்வித தீய பழக்கங்கள் இல்லாதவர்களும் நோயுற்று மரணமடைவதற்கான உண்மையான காரணம் என்னவென்று எப்போதாவது கேள்வி எழுப்பி இருக்கிறோமா? அனைத்து வயதினர்களுக்கும் நோய்கள் வருவதற்கான முக்கிய காரணம் நமது உணவில் உள்ள விஷங்கள் தானே?
நோய்களுக்கான மருத்துவங்களைப் பற்றி அவ்வப்போது விவாதிக்கும் நாம் ஏன் நோய்களுக்கான காரணங்களைச் சரிசெய்து, ஆரோக்கியமான வாழ்வியலை ஏற்படுத்துவது பற்றி ஒருபோதும் உரையாடுவதில்லை?
விவசாய துறையில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது, தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது, வேலைகளை எளிமையாக்கத் தினந்தோறும் புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்படுகிறது எனப் பெருமைப்படும் அறிவியலால் விஷம் இல்லாத உணவைச் செய்ய முடியாதா? இல்லை, விஷமில்லாத உணவால் வியாபாரமும் வருவாயும் குறையும் என்பதால், ஆரோக்கியமான உணவுகள் உற்பத்தி செய்யப்படுவதில்லையா?
அப்படி என்றால், விஷம் இல்லாமல் உணவை விளைவிக்க முடியாது என்று விவசாயிகளையும், விஷம் இல்லாமல் அனைவருக்குமான உணவை உற்பத்தி செய்ய முடியாது என்று நம்மையும் நம்ப வைக்கப்பட்டதற்குப் பின்னால் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று தானே அர்த்தம்?
நம்மிடம் வாழ்வியலாக இருந்த ஆரோக்கியமான உணவு உற்பத்தி பெரு நிறுவனங்களின் நிரந்தர லாப நோக்கத்திற்காக உரமாகவும், மருந்தாகவும், விதையாகவும் நமது உணவுகள் விஷமாக்கப்பட்டு நாம் அனைவரும் திட்டமிடப்பட்டு நோயாளிகள் ஆக்கப்படுகிறோம் என்பது தானே உண்மை?
ஆக, மக்களுக்குத் தேவையான ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்ய வேண்டிய விவசாயம், இன்று நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொலை செய்யக்கூடிய நோய்களைத் தானே உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது?
தொடர்ந்து இது போன்ற கேள்விகளை எழுப்புவதற்கும், மாற்றத்தை நோக்கி பயணிப்பதற்கான உரையாடல்களில் பங்கெடுப்பதற்கும் வட்டத்தில் இணைந்திருங்கள்.
வட்டம், உலகத்தை மாற்றக்கூடிய கேள்விகளை எழுப்புகிறது. புதியதொரு உலகத்தை உருவாக்கக் கூடிய உரையாடல்களை வட்டம் தொடங்குகிறது. விழிப்படையவும். ஒன்றிணையவும். வட்டம்.
உணவில் கலக்கப்படும் விடம் உயிரில் கலக்கப்படுவதே.
இதைத்தோலுரித்துக் காட்டுவது அனைவரின் கடமையே.முன்னெடுப்பிற்க்கு வாழ்த்துக்கள்.
கேள்விகள் கேட்கவும், உரையாடலைத் தொடங்கவும் வட்டம் தொடர்ச்சியாக செயல்படும். வட்டத்தின் பதிவுகளை உங்களது நண்பர்களிடம் பகிர்ந்து மக்களிடம் சென்று சேர உதவவும்.