இன்றைய நவீன மருத்துவம் மக்களின் நோய்களை குணப்படுத்துவதற்காக செயல்படுகிறது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். மருத்துவர்களும் மருத்துவமனைகளும் நம்மை நோயிலிருந்து விடுவிப்பதாக நாம் நம்புகிறோம்.
ஆனால், மக்களை நோய்களிலிருந்து விடுவிப்பது தான் மருத்துவத்தின் நோக்கமாக இருக்கிறதா? இன்றைய மருத்துவ உலகம், மக்களின் உடல்நலத்தில் அக்கறை கொண்டுள்ளதா? இன்றைய மருத்துவம் மக்களுக்கானதாக இருக்கிறதா?
நாளுக்கு நாள் நமது உலகம் பல மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அறிவியல் வளர்ச்சியால் மருத்துவ உலகம் நம்மைப் பிரமிப்பூட்டும் வகையில் மேம்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய கருவிகளும் தொழில்நுட்பங்களும் கண்டுபிடிக்கப்படுகிறது.
அப்படி என்றால், நவீன மருத்துவத்தின் வளர்ச்சியால் நோய்களும் நோயாளிகளும் எண்ணிக்கையில் குறைய வேண்டும் அல்லவா? நமது உடல்நலம் முன்னேற வேண்டும் அல்லவா? நாம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் அல்லவா?
ஒவ்வொரு ஆண்டும் பல புதிய மாணவர்கள், படிப்பில் சிறந்த மாணவர்கள் பட்டம் பெற்று மருத்துவர்கள் ஆகிறார்கள். அனைத்து நாடுகளிலும், நகரங்களிலும், தெருக்களிலும் புதிய புதிய மருத்துவமனைகளும் மருந்தகங்களும் திறக்கப்படுகின்றன.
ஆனால், நோய்கள் குறைவதற்குப் பதிலாக அதிகரித்துக் கொண்டு தானே இருக்கிறது? நோயாளிகளின் எண்ணிக்கையும், நோய்களினால் மரணமடையும் மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டு தானே இருக்கிறது?
இருந்தும், நாம் அனைவரும் மருத்துவத்தின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ளோம். மருத்துவர்கள் நம்மை குணப்படுத்திவிடுவார்கள். மருந்தும் மாத்திரைகளும் நமது உடலில் வரும் துன்பங்களை தீர்த்துவிடும். மருத்துவமனைகள் நம்மை அனைத்து நோய்களிலிருந்தும் காப்பாற்றிவிடும் என்று நம்புகிறோம்.
அதனால், நாம் அனைவருக்கும் தனித்தனியான குடும்ப மருத்துவர்கள் இருக்கிறார்கள். பெரிய மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்கிறோம் எனப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். நமது மருத்துவர்கள் தான் சிறந்த மருத்துவர்கள் என நாம் கதைகள் பேசுகிறோம்.
அப்படி என்றால், ஏன் நமது நோய்களும் உடலியல் தொந்தரவுகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன? எதற்காக நம்மில் பலர் தொடர்ச்சியாக மருந்துகளோடும் மருத்துவர்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? நோய்களால் ஏற்படக்கூடிய மரணங்கள் எப்படி தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது?
நவீன மருத்துவத்தின் புள்ளி விவர விளம்பரங்கள் நமது சிந்தனைகளைத் திசை திருப்பலாம். ஆனால், நமது உடலில் நிறைய தொந்தரவுகள் இருப்பதாலும், நம்மில் பலர் நோயாளிகளாக இருப்பதாலும் தானே புதிய மருத்துவமனைகள் திறக்கப்படுகின்றன? மருத்துவமனைகள் தொடர்ச்சியாக இயங்குகிறது என்றால் நாம் எப்போதும் நோயாளிகளாக இருந்து கொண்டு இருக்கிறோம் என்று தானே அர்த்தம்?

மக்களின் நோய்களைக் குணப்படுத்துவது தான் மருத்துவத்தின் நோக்கமாக இருந்தால் நாம் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்போம் தானே? இன்றைய மருத்துவ உலகம், நோய்களினால் துன்பப்படும் நம்மைப் பற்றி அக்கறை கொண்டிருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் தானே?
ஆனால், நம்மில் பெரும்பாலானோர், நமது உழைப்பின் பெரும் பகுதி வருமானத்தை மருத்துவத்தில் செலவு செய்து கொண்டிருக்கிறோம் தானே? நமக்கோ, நமது பெற்றோர்களுக்கோ, நமது குழந்தைகளுக்கோ மருத்துவமனையை நாடாமல் நம்மில் எத்தனை பேர் வாழ்கிறோம்?
நாம் ஆரோக்கியமாக வாழ்கிறோமா? நமது சமூகம் ஆரோக்கியமான சமூகமாக இருக்கிறதா? இல்லை என்றால், நாம் நம்பும் மருத்துவர்கள் நமக்கு என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? இத்தனை மருத்துவமனைகள் எதற்காக இயங்கிக் கொண்டிருக்கிறன?
மருத்துவர்கள் தொடர்ந்து செயல்படவேண்டும் என்றாலும், மருத்துவமைகள் வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்றாலும், நாம் அனைவரும் எப்போதும் நோயாளிகளாக இருக்க வேண்டும் தானே?
நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தால் மருத்துவமனைகளின் நிலைமை என்னவாகும்? நோய்கள் குறைந்த உலகத்தில் மருத்துவர்களுக்கு என்ன வேலை? நோய்களுக்காக மாத்திரை மருந்து வாங்காத ஊர்களில் மருந்தகங்கள் என்னவாகும்? நாம் அனைவரும் நோயிலிருந்து விடுபட்டு உடல்நலத்துடன் வாழ்ந்தால் மருத்துவ உலகம் வெற்றிகரமாக இயங்க முடியுமா?
தனிப்பட்ட மருத்துவர்களைக் குறை சொல்வதற்காகவும், குறிப்பிட்ட மருத்துவமனைகளைக் குற்றம் சாட்டுவதற்காகவும் இந்த கேள்விகள் எழுப்பப்படவில்லை. மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருத்துவக் கல்லூரிகள், மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள், மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மருத்துவ ஆராய்ச்சிக் கூடங்கள், மருந்துகள் கண்டுபிடிக்கும் பெரு நிறுவனங்கள், மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் என விரிந்து கொண்டே போகும் மாபெரும் மருத்துவ உலகம் தனது வெற்றிக்காக நம்மை நோய்களுடன் போராட வைக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்காகக் கேட்கப்பட்டவை.
அப்படி என்றால், மக்களின் நோய்களை குணப்படுத்த வேண்டும் என்பதற்காக மருத்துவமனைகள் இயங்குவதில்லை என்பது தானே உண்மை? மருத்துவ உலகம் தொடர்ச்சியாக வெற்றியடைந்து கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக நாம் நோய்களுடன் வாழ வைக்கப்படுகிறோம் என்பது தானே உண்மை?
தொடர்ந்து இது போன்ற கேள்விகளை எழுப்புவதற்கும், மாற்றத்தை நோக்கி பயணிப்பதற்கான உரையாடல்களில் பங்கெடுப்பதற்கும் வட்டத்தில் இணைந்திருங்கள்.
வட்டம், உலகத்தை மாற்றும் வல்லமை படைத்த கேள்விகளை எழுப்புகிறது. புதியதொரு உலகத்தை உருவாக்கக் கூடிய உரையாடல்களை தொடங்குகிறது. விழிப்படையவும். ஒன்றிணையவும். வட்டம்.
காலமறிந்த விழிப்புணர்வு பதிவு வாழ்த்துகள்….. – பாபு
மனமார்ந்த நன்றிகள். உணவு, மருத்துவம், கல்வி, ஊடகம், பணம் மற்றும் அரசியல் தலைப்புகளில் புதிய பதிவுகள் தொடர்ச்சியாக வெளியிடப்படும். மின்னஞ்சல் மூலமாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும் வட்டத்தில் இணைந்திருங்கள்.
சிறப்பு. மேலும் பல பதிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.
நமது சமூகக் கட்டமைப்புகளின் செயல்பாடுகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மைகளைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான படைப்புகளை உருவாக்கவும் வெளியிடவும் வட்டம் தொடர்ச்சியாக செயல்படும்.