அரசியல் அமைப்புகளின் செயல்பாடுகளில் ஏதாவது தவறுகள் இருந்தால், அவற்றைச் சரிசெய்ய முயற்சிக்கலாம். ஆனால், அரசியலின் நோக்கமே தவறாக இருந்தால், ஒட்டுமொத்த அரசியலையும் மாற்றியமைப்பது மட்டும் தானே சரியாக இருக்கும்?
மக்களுக்காகச் செயல்படும் அமைப்புகளில் ஏதாவது குறைகளும் குற்றங்களும் நடந்தால், அவற்றைத் தடுக்க முயற்சிக்கலாம்; தேவையெனில் போராடலாம். ஆனால், மக்களுக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அரசியல் அமைப்புகளை உருவாக்கி இருந்தால், அமைப்புகள் அனைத்தையும் முழுமையாக மறு உருவாக்கம் செய்வது மட்டும் தானே மாற்றமாக இருக்கும்?
எதுவாக இருந்தாலும், பழுது பார்ப்பதற்குக் கூட அதை பற்றிய புரிதல் வேண்டும். அதன் தேவை என்ன, எப்படிச் செயல்பட வேண்டும், என்ன தவறு இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே, அதைச் சரி செய்ய முடியும். அப்படி என்றால், ஒன்றை முழுமையாக மாற்றுவதற்கும், மறு உருவாக்கம் செய்வதற்கும் அதைப் பற்றிய அறிவும் ஆழமான புரிதலும் தானே முதல் தேவையாக இருக்க முடியும்?
மாற்றம் எப்போது நடக்கும்?
செயல்படுவதாக நாம் நம்புவது, செயல்படவில்லை; இனியும் செயல்படாது என்று தெரிந்தால் தானே மாற்றம் நடக்கும்? அப்படி என்றால், நமக்காகச் செயல்படுவதாக நாம் நம்பும் அமைப்புகள் அனைத்தும் நமக்கு எதிராகச் செயல்படுவதற்காகவே உருவாக்கப்பட்டது, நமக்கு எதிராகத் தான் செயல்படுகிறது, இனியும் நமக்கு எதிராகத் தான் செயல்படும் என்ற புரிதல் தானே மாற்றத்தின் முதல் தேவை?
அதனால், மாற்றத்தை ஏற்படுத்த, நமது சமூக அமைப்புகள் அனைத்தும் நமக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமக்காகச் செயல்படுவதாக நாம் நம்பும் அரசாங்கமும், அரசாங்கத்தின் அமைப்புகள் அனைத்தும் நமக்கு எதிராகச் செயல்படுவதற்காகவே உருவாக்கப்பட்டது என்பதை நாம் உணர வேண்டும்.
உணவை விஷமாக மாற்றிய அரசியலையும், அதன் பின்னால் இருக்கும் வியாபார நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவ சந்தையின் மதிப்புகளை உணர்ந்து, அதன் லாபத்திற்காகச் செயல்படும் மருத்துவ நாடகங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். கல்வியும் ஊடகமும் நமது சிந்தனைகளை மாற்றும் சக்தி படைத்தவை என்பதை உணர்ந்து, அவை நம்மை எப்படிக் கட்டுப்படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நமது சமூகத்தைத் தீர்மானிக்கும் மிகப்பெரிய ஆயுதமாகப் பணம் எப்படி மாறியது, நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் பணம் எப்படிக் கட்டுப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பணத்திற்குப் பின்னால் இருக்கும் சூழ்ச்சிகளை ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும்.
அதோடு மட்டும் நின்று விடாமல், ஒவ்வொரு அமைப்பும் எப்படி உருவாக்கப்பட்டது, எவ்வளவு தந்திரமாகச் செயல்படுகிறது, தொடர்ச்சியாக நாம் அனைவரும் எப்படி ஏமாற்றப்படுகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில், அதிகாரம் மட்டுமே நம்மை ஆட்சி செய்வதில்லை. அரசாங்கம் மட்டுமே நம்மைக் கட்டுப்படுத்தவில்லை. பள்ளிக்கூட படிப்பும் பாடங்களும் நமது சிந்தனைகளைச் செதுக்கி இருக்கிறது. செய்தித்தாள்களும் தொலைக்காட்சியும் நம் அனைவரது மனதையும் அடக்கி ஆண்டு கொண்டிருக்கிறது. விளம்பரங்களும் வியாபாரங்களும் நம்மை ஓடவைத்துக் கொண்டிருக்கிறது. பயமும் ஆசையும் நமது வாழ்க்கையை கட்டுப்படுத்துகிறது.
அறிவின் பெயரால், வளர்ச்சியின் பெயரால், நாம் ஏமாற்றப்படுகிறோம். வரலாற்றின் பெயரால், சுதந்திரத்தின் பெயரால் நாம் அடிமைப்படுத்தப்படுகிறோம். இந்த சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டுள்ள, இவற்றைப் புரிந்துகொள்ள இயலாத, குடும்பத்தாலும் உறவுகளாலும் நாம் அமைதியாக்கப்படுகிறோம்.
அது மட்டும் இல்லாமல், இந்த அமைப்புகள் எதுவும் தனியாகச் செயல்படுவதில்லை; இவை அனைத்தும் சிக்கலாகப் பின்னப்பட்ட முடிச்சுகளால், பிரிக்க முடியாத தொடர்புகளால், ஒற்றை அமைப்பாகத் தான் இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசாங்கமும் அரசியலும் இங்கு அமைப்புகளாக மட்டுமே செயல்படவில்லை. சிந்தனைகளாகவும், நம்பிக்கைகளாகவும், உணர்வுகளாகவும் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நமது மனம் தான் அவர்களுடைய மிகப்பெரிய ஆயுதம் என்பது தெரிந்துகொள்ள வேண்டும். நமது மனம் நமது கட்டுப்பாட்டில் இல்லை; நாம், நமக்காக சிந்திப்பதில்லை; அமைப்புகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான சிந்தனைகள் நமக்குள் தொடர்ச்சியாக விதைக்கப்பட்டு, நம்மில் பெரும்பாலானோர், அமைப்புகளின் நோக்கத்திற்காக சிந்திக்க வைக்கப்படுகிறோம், செயல்படுகிறோம் என்பதை உணர வேண்டும்.
நமது மனதில் விதைக்கப்பட்டுள்ள சிந்தனைகளும், நம்பிக்கைகளும் தான், அவர்களின் முக்கியமான கருவிகள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த சிந்தனைகள் என்னென்ன, அவை நமது வாழ்க்கையை எவ்வாறு மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அமைப்புகள் மீதான நமது நம்பிக்கைகளை உடைக்க நாம் அமைப்புகளைப் பார்க்கும் விதத்தில் மாற்றம் வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் நாடகங்களுக்குப் பின்னால் இருக்கும் சூழ்ச்சிகளையும் அவற்றின் மறைமுக நோக்கங்களையும், தந்திரமான செயல்பாடுகளையும் நாம் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டால், மாற்றத்திற்காக காத்திருக்காமல், நாம் மாற வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் தானாகவே வந்துவிடும். அப்படி என்றால், அந்த புரிதல் தானே மாற்றத்திற்கான முதல் தேவை?
ஆம், புரிதலில் தான் மாற்றம் தொடங்குகிறது. உண்மைகளைத் தெரிந்து கொள்ளவும், சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்ளவும், வட்டத்தில் இணைந்திருங்கள். விழிப்படையவும். ஒன்றிணையவும். வட்டம்.