நமது வாழ்க்கை எப்போதும் போட்டிகளாலும் பரபரப்புகளாலும் நிறைந்துள்ளது. நாம் அனைவரும் எப்போதும் ஏதோ ஒரு இலக்கை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறோம். எதையோ அடைய வேண்டும், எவரிடமோ நிரூபிக்க வேண்டும் என்று நாம் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். சில மனிதர்களை வெற்றி பெறுவதற்காக நமது ஓட்டத்தை வேகப்படுத்துகிறோம். அவர்களை விட எப்போதும் மேம்பட்ட நிலையில் இருப்பதற்காகத் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
நாம் எப்போது ஓடத் தொடங்கினோம் என்பது கூட நமக்குத் தெரியாது. இந்த ஓட்டத்தில் நாமாக விரும்பி பங்கேற்கவில்லை. நம்முடைய நன்மைகளுக்காக நாம் இயங்குவதில்லை. ஆனால், பணத்திற்காக, பொருளுக்காக, பதவிக்காக, குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக, நாளைய தேவைகளுக்காக என்று ஏதோ ஒரு காரணத்திற்காக நாம் அனைவரும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
பள்ளியில் சேர்த்துப் படிக்கச் சொன்ன போது தொடங்கியது இந்த ஓட்ட பந்தயம். படித்தால் தான் வாழ்க்கை எனப் பயப்பட வைத்து பந்தயத்தில் பங்கு பெறச் செய்தார்கள். பள்ளியும் படிப்பும் பிடிக்கவில்லை என்றாலும் கட்டாயப்படுத்திப் படிக்க வைத்தார்கள். நம்மை போலவே விருப்பமில்லாமல் அழுது கொண்டிருந்தவர்களைக் காட்டி சமாதானம் செய்து பந்தயத்திற்குப் பழக்கினார்கள்.
பள்ளியில் நன்றாகப் படித்தால் தான் நல்ல கல்லூரி எனச் சொல்லி நம்மை வேகப்படுத்தினார்கள். நாமும் படித்தோம். கல்லூரியில் நன்றாகப் படித்தால் தான் நல்ல வேலை என்றார்கள். நாமும் படித்தோம். நன்றாக வேலை பார்த்தால் தான் நிறையப் பணம் என்கிறார்கள். நாமும் வேலை பார்க்கிறோம். பணம் சம்பாரிக்கிறோம். நாம் ஆசைப்பட்ட பொருட்களை வாங்குகிறோம். நமது கனவுகளை நிறைவேற்றத் தொடங்குகிறோம்.
ஆசைப்படுவது, ஆசைகளை நிறைவேற்றக் கடினமாக உழைப்பது, அவற்றை நிறைவேற்றுவது. மறுபடியும் ஆசைப்படுவது, இன்னும் கடினமாக உழைப்பது, அவற்றையும் நிறைவேற்றுவது என ஓட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
நாம் ஆசைப்படுவதில்லை. தேவையானவற்றைத் தான் வாங்குகிறோம் என நினைத்தால், தேவைகள் நிறைவேற நிறைவேற புதிய புதிய தேவைகள் தொடர்ச்சியாக முளைத்துக் கொண்டே இருக்கின்றன. நாமும் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கிறோம். நாம் ஓடிக்கொண்டிருக்கும் போதே, நமது குழந்தைகளை ஓட்டப் பந்தயத்தில் பங்குபெறச் செய்துவிடுகிறோம். நமக்கான இடத்தை அவர்கள் பிடித்துக் கொள்கிறார்கள்.
எனக்கு முன் ஓடிக்கொண்டு இருந்தவர்களுக்காக நான் ஓடுகிறேன். வேறு வழியின்றி ஓடிக்கொண்டு இருக்கிறேன். எனக்காக அடுத்த தலைமுறை ஓடுகிறது. என்னைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் இப்படி தான் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.
முன்னே செல்லும் ஆடுகளை பின் தொடரும் ஆட்டு மந்தையைப் போல சென்று கொண்டிருக்கிறோம். கடிவாளம் கட்டிய பந்தயக் குதிரைகளைப் போல ஓடிக்கொண்டு இருக்கிறோம். நினைவுபடுத்த முடியாத நாட்களில் தொடங்கிய இந்த பந்தயம், வாழ்வின் இறுதிக் காலங்களில் தான் முடிவு பெறுகிறது.
பசியோடு தூங்குபவர்கள், உணவு தேடி அலைகிறார்கள். உணவுத்தேவையை கடந்தவர்கள் பாடுபடாமல் வாழ உழைக்கிறார்கள். படித்தவர்கள் மேம்பட்ட வாழ்க்கையைத் தேடி பொருள் சேர்க்கிறார்கள். வசதி படைத்தவர்கள், பெயரையும் பொருளையும் காப்பாற்ற ஓடுகிறார்கள். பெரும் பணம் படைத்தவர்கள், பத்து தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்திருப்பவர்கள் என அனைவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக ஓடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
நமக்குள் எத்தனை ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், நாம் அனைவருமே பரபரப்பான வாழ்க்கையைத் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? அப்படி என்றால், நாம் யாராக இருந்தாலும், என்ன வேலை செய்தாலும், நாம் அனைவரும், ஒரே பந்தயத்தின் வெவ்வேறு தளங்களில் ஓடிக்கொண்டிருக்கும் பந்தயக் குதிரைகள் தானே?

நமது நன்மைக்கும், குடும்பத்தின் தேவைகளுக்கும் உழைப்பது யதார்த்தம் தானே என யோசிக்கலாம். நிம்மதியான வாழ்க்கையை நோக்கித் தானே நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம், அதிலென்ன தவறு இருக்கிறது என நினைக்கலாம்.
நினைப்பது சரி தான். ஆனால், நமது நன்மைக்காக உழைக்கிறோமா? இல்லை, நமது உடலை மறந்து உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் பணத்தை நோக்கி ஓடுகிறோமா? நமது குடும்பத்திற்காக உழைக்கிறோமா? இல்லை, குடும்பத்துடன் அமைதியாக வாழ நேரமில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறோமா? நிம்மதியான வாழ்க்கையை தேடுகிறோமா? இல்லை, முடிவில்லாத பந்தயத்தின் சிறிய வெற்றிகளிலும் சின்னஞ்சிறு பரிசுகளிலும் நமது வாழ்க்கையின் நிம்மதியை தொலைத்துக் கொண்டிருக்கிறோமா?
பயணிப்பது தானே வாழ்க்கை? ஒவ்வொருவரும் தனக்கான பாதைகளில் வெவ்வேறு வழியில் பயணித்து கொண்டிருக்கிறோம் என நினைக்கலாம். ஆனால், பயணத்தை ரசிப்பதும், மகிழ்ச்சியாகப் பயணிப்பதும் தானே பயணத்தின் அழகு? நமது வாழ்க்கை பயணம் அமைதியானதாக இருக்கிறதா? இல்லை, அழுத்தமானதாக இருக்கிறதா? நாம் பயணித்து கொண்டிருக்கிறோமா? அல்லது, அவ்வப்போது சென்றடைய வேண்டிய இலக்குகளை நோக்கி வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோமா?
நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம் என நம்மை உணரவிடாமல், ஏன் ஓடுகிறோம் எனச் சிந்திப்பதற்கு நேரம் கொடுக்காமல் தொடர்ந்து ஓடுவதிலும், வேகமாக ஓடுவதிலும் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டு இருக்கும் நாம் அனைவரும் அர்த்தமற்ற, முடிவில்லாத ஓட்டப்பந்தயத்தில் நம்மை மறந்துவிட்டு ஓடிக் கொண்டிருக்கிறோம் என்று எப்போது உணர போகிறோம்?
நமது தனிப்பட்ட வாழ்க்கையை நியாயப்படுத்துவதை நிறுத்திவிட்டு, பரபரப்புகளிலிருந்தும், பந்தயங்களிலிருந்தும் எப்போது விடுபடப் போகிறோம்? எப்போது நாமே நமது வாழ்க்கையைக் கேள்விக்கு உள்ளாக்கப் போகிறோம்? இப்படிப்பட்ட பரபரப்பான பந்தயத்திலிருந்து நாம் எப்படி நம்மை விடுவித்துக்கொள்ளப் போகிறோம்? நமது தனிப்பட்ட வாழ்க்கையிலும் நமது சமூகத்திலும் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம்?
மனிதர்களாக, நாம் அனைவரும் இந்த பூமியில் என்ன செய்து கொண்டிருக்கிறோம், பூமியை என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று எப்போது அமைதியாகச் சிந்திக்கப் போகிறோம்?
அமைதியான சிந்தனைகளிலிருந்து தான் மாற்றம் பிறக்கும். உண்மையான உரையாடல்களில் தான் மாற்றம் நிகழும்.
நமது சிந்தனைகளைத் தூண்டக்கூடிய கேள்விகளை எழுப்புவதற்கும், மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய உரையாடல்களில் பங்கெடுப்பதற்கும் வட்டத்தில் இணைந்திருங்கள்.
உண்மையை உரக்கப் பேசுவதற்காகவும் மக்களை ஒன்றிணைப்பதற்காகவும் வட்டம் செயல்படுகிறது.