நாம் எதை நம்புகிறோமோ, அதுவாகவே வாழ்கிறோம். நமது நம்பிக்கைகள் தான் நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது.
நாம் பிறந்த நாடும், நமது ஊரும் நமது நம்பிக்கைகளை தீர்மானிக்கிறது. நம்முடைய மதங்கள் நமது எண்ண ஓட்டங்களை தீர்மானிக்கிறது. நமது சமூகமும் நமது குடும்பமும் எதை நம்புகிறதோ, அந்த நம்பிக்கைகளின் படி தான் நம்மை வளர்க்கிறது. நமது சிந்தனைகள் யாவும் நமது பெற்றோர்களிடம் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும், நாம் சந்திக்கும் அணைத்து மனிதர்களிடம் இருந்தும் வருகிறது. நமது பள்ளிகளும், பாடங்களும் நமது உண்மைகளையும் சிந்தனைகளையும் உருவாக்குகிறது.
நமது விருப்பு-வெறுப்புகளை நமது தொலைக்காட்சியும், திரைப்படங்களும் கட்டுப்படுத்துகிறது. நாம் பார்த்த அனைத்து நிகழ்வுகளும், நாம் கேட்ட ஒவ்வொரு வார்த்தைகளும் தான் நமது எண்ணங்களை முடிவு செய்கிறது. நமது சுற்றமும், சூழலும் நமது அனுபவங்களும் தான் நாம் யார் என்பதை முடிவு செய்கிறது. இவை அனைத்தும் தான் நமது கண்ணோட்டங்களையும் நமது சிந்தனைகளையும் தீர்மானிக்கிறது.
உண்மை இப்படியாக இருந்தும், நாம் நம்பிக்கொண்டு இருக்கும் உண்மைகள் யாவும் நமது பகுத்தறிவின் விளைவாக வரவில்லை என்பதை நம்மில் யாரும் சிந்திப்பதில்லை. அதனால், நாம் எந்த நம்பிக்கைகளையும் ஒரு போதும் சந்தேகப்படுவதும் இல்லை, கேள்வி எழுப்புவதும் இல்லை.
நாம் இது நாள் வரையில் உண்மை என எவற்றையெல்லாம் நம்பிக்கொண்டு இருக்கிறோமோ, அவை அனைத்தும் உண்மையாகவே இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை தானே? நாம் நம்புவதால் மட்டுமே அவை உண்மையாகி விடாதல்லவா?
நாம் உண்மையை நம்புகிறோமோ? அல்லது நாம் நம்புவதை உண்மை என நினைக்கிறோமோ? நாம் நம்புவது மட்டுமே உண்மை என தானே நாம் அனைவரும் நினைக்கிறோம்?
அதனால் தானே, பெரும்பாலான நேரங்களில், நாம் அனைவருமே, நாம் நம்புவதற்கு மாறாக யாரேனும் பேசினால், அவர்கள் பேசி முடிக்கும் முன் நாம் மறுக்க தொடங்கிவிடுகிறோம்? நம்மை நியாயப்படுத்திக் கொள்வதில் மட்டுமே நாம் கவனம் செலுத்துகிறோம்? அதனால் தானே, மாற்றுக் கருத்துக்களை பற்றி நாம் யாரும் சிந்திப்பது கூட இல்லை?
அது மட்டும் இல்லாமல், நாம் அனைவரும் நமது நிகழ்கால வாழ்விற்கு மனதளவிலும் உடலளவிலும் பழகியுள்ளோம். அதனால், நமது நம்பிக்கைகளுக்கு மாறுபடும் உண்மைகளை உள்வாங்கிக்கொள்ள தயங்குவதும், அவற்றை எதிர்ப்பதும் நம்மை அறியாமலே நடக்கிறது.
ஏனெனில், புதிய கருத்துக்களுக்கு நம்மை மாற்றிக்கொள்ள, நமது மனம் செயல்படும் விதத்தில் மாற்றம் தேவைப்படும். நமது மனமும், உடலும் இத்தனை ஆண்டுகளாக பதிவில் இருந்தவற்றை மாற்ற கூடுதல் வேலைகளை செய்ய வேண்டும். அதனால் தான், பழகிய எதையும் மாற்ற நாம் சிரமப்படுகிறோம். மாறுவதை விட எதிர்ப்பது சுலபம் என்பதால் தான் நாம் சிந்திப்பதற்கு முன்னரே அனைத்தையும் எதிர்க்கிறோம்.

அடுத்ததாக, நாம் யாரும் நல்ல உரையாடல்களில் எப்போதும் பங்கெடுத்ததில்லை. எதிர் கருத்துக்களுக்கு மதிப்பளித்து எந்த கருத்துக்கள் உண்மையானவை, எதனால் அது உண்மையாகிறது என்று அமைதியாக நிகழக்கூடிய உரையாடல்களை நாம் யாரும் பார்த்ததில்லை. நாம் அனைவரும், விவாதங்களுக்கும் வாக்குவாதங்களுக்கும் தான் பழக்கப்பட்டு இருக்கிறோம். யாருடைய கருத்து சரியானது என்பதில் தான் நம்முடைய பெரும்பாலான உரையாடல்கள் முடிகிறது.
நமது கருத்துக்களை யாராவது எதிர்த்து பேசினால், அவர்கள் நம்மை எதிர்க்கிறார்கள் என நினைக்கிறோம். அந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொண்டால், நம்மை விட அவர் உயர்ந்தவர் ஆகிவிடுவார் என மாற்றுக் கருத்துக்களை தனிப்பட்ட போட்டியாக நினைத்து ஒதுக்கிவிடுகிறோம்.
கூடுதலாக, நாம் அனைவரும் நமது வாழ்வில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். நம்மை சுற்றி என்ன கொண்டிருக்கிறது என்பதை பற்றி எதுவும் தெரியாமல், தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லாமல் வாழ்கிறோம். கூடவே, தெரியாது என்பதில் பெருமைப்படுகிறோம். வெளியுலக வாழ்வியலை பற்றி சிந்திப்பதும் பேசுவதும் மாற்றத்தை ஏற்படுத்துவதும் நமக்கு தேவையில்லை எனவும், நாம் மாறுவதினால் இங்கு எதுவும் மாறிவிடாது எனவும் நாம் நம்புகிறோம்.
ஆனால், நமது நம்பிக்கைகளை அவ்வப்போது நாமே கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்று நாம் யாரும் சிந்திப்பதில்லை. சில நேரங்களில் அவை நம்மை விழிப்படைய செய்யலாம். அதனால், தேவைப்படும் நேரங்களில், நமது வாழ்க்கைப் பயணத்தில் நமது உண்மைகளை கேள்விக்குட்படுத்துவதும், நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மறுப்பதும் அவசியமாகிறது.
மாற்றுக் கருத்துக்களுக்கு திறந்த மனதுடன் செவி சாய்ப்பதும் அவற்றில் உண்மை இருப்பின் அவற்றை ஏற்றுக்கொள்வதும் தானே அறிவின் அடையாளம்?
அப்படி என்றால், நம்முடைய புரிதல்களையும் நமது உண்மைகளையும் எப்போது சுய விமர்சனம் செய்யப் போகிறோம்? நமது மனதில் ஆழமாக பதிந்துள்ள நம்பிக்கைகளை எப்போது கேள்வி எழுப்பப் போகிறோம்?
காலம் காலமாக கைமாற்றப்படும் நம்பிக்கைகளையும், உண்மை என நாம் எப்போதும் நம்பிக்கொண்டிருக்கும் கருத்துகளையும் கேள்வி எழுப்புவதற்கான சரியான நேரம் இது தான். கேள்விகளுக்கு இடம் கொடுக்காமல் நம் மீது திணிக்கப்பட்ட அனைத்து சிந்தனைகளையும் கேள்வி எழுப்புவோம்.
நாம் நம்புவது மட்டுமே உண்மையென நினைத்து வாழ்ந்தது போதும். பலரால் நம்பப்படும் உண்மையாக இருப்பினும், நெடுங்காலமாக கைமாற்றப்படும் கருத்துகளாக இருப்பினும் அவை அனைத்தையும் எவ்வித தயக்கமும் இன்றி கேள்விக்கு உட்படுத்துவோம்.
நாம் ஒவ்வொருவரும், நமது மனதிற்குள் ஒரு அமைதியான உரையாடலை ஏற்படுத்த முடிந்தால், அந்த உரையாடலின் வழியாக நமது உண்மைகளை மாற்றினால், நமது வாழ்க்கையில் நமக்கான நல்ல மாற்றங்களை நம்மால் ஏற்படுத்த முடியும்.
அப்படியான சிந்தனைகளை தூண்டக்கூடிய கேள்விகளை எழுப்புவதற்கும், மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய உரையாடல்களில் பங்கெடுப்பதற்கும் வட்டத்தில் இணைந்திருங்கள். உங்களின் நட்பு வட்டங்களில் எங்களது பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். விழிப்படையவும், ஒன்றிணையவும் வட்டம்.