ஏன் தொடங்கப்படுகிறது?
நயவஞ்சகங்கள் உலகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் போது, உண்மையைப் பேசுவதற்காக வட்டம் தொடங்கப்படுகிறது.
இன்றைய நவீன உலகம், உணவு உற்பத்தியை அதிகப்படுத்துவதாக நமது உணவுகளில் விஷங்களைக் கலந்து கொண்டிருக்கிறது; மருத்துவம் என்ற பெயரில் நமது நோய்களைக் குணமடையாத வகையில் பராமரித்து, நோய்களைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது; கல்வி என்ற பெயரில் நமது உலக கண்ணோட்டங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது; பொழுதுபோக்கு என்ற பெயரில் நமது சிந்தனைகளைத் திசைதிருப்பிக் கொண்டிருக்கிறது; பணத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக நமது செயல்பாடுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது; அரசாங்கம் என்ற பெயரில் நம்மிடம் அறியாமையை விதைத்து நம்மை ஏமாற்றி ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
உண்மையில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதும், நம்மை சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையும் நமக்குத் தெரியாது. நமக்குத் தெரியாது என்பதை கூட தெரிந்து கொள்ளாமல், நாம் பரபரப்பாக அலைந்து கொண்டிருக்கிறோம்.
அதனால், நமக்குத் தெரியாத உண்மைகளை, நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகளை, அனைவருக்கும் தெரியப்படுத்தவும், நமது உண்மைகளையும் நமது உலகத்தையும் மறுஉருவாக்கம் செய்யவும் வட்டம் தொடங்கப்படுகிறது.
பிரிவினைகளை ஏற்படுத்தி அரசியல் செய்யும் உலகத்தில், அனைவரையும் ஒன்றிணைக்க வட்டம் தொடங்கப்படுகிறது.
இன்றைய சமூகத்தில், நாம் அனைவரும் ஏதோ ஒரு குழுவின் பெயரிலோ, அமைப்பின் பெயரிலோ, நிறுவனங்களின் பெயரிலோ, மனிதர்களின் பெயரிலோ தான் நம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் நம்மை நமது நாடாகவும், நமது நிறமாகவும், நமது மொழியாகவும், நமது மதமாகவும், நமது வேலையாகவும், நம்மிடம் இருக்கும் பணமாகவும், நாம் விரும்பும் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்களாகவும் வேறுபடுத்தி நம்மை நாமே பிரித்துக் கொண்டிருக்கிறோம்.
நம்மில் எவரும் நம்மை ஒரு சாதாரண மனிதனாகவோ, ஒட்டுமொத்த மனித இனத்தின் வெளிப்பாடாகவோ நினைத்துப் பார்ப்பதில்லை. அந்த சிந்தனையின்மை தான், நாம், நமது தனிமனித சுயத்தையும் மனித இனத்தின் இயல்பான உணர்வுகளையும் மறந்ததற்குக் காரணம் என வட்டம் நம்புகிறது.
அதனால், பிரிவினைகளால் நம்மைச் சுரண்டிக் கொண்டிருக்கும் கண்ணோட்டங்களை உடைக்கவும், நம்முடைய சுய அறிவையும், மனித மாண்புகளையும் நினைவுபடுத்தவும், நம் அனைவரையும் ஒன்றிணைக்கவும் வட்டம் தொடங்கப்படுகிறது.
எப்படிச் செயல்படுகிறது?
மனிதர்களையும் நிகழ்வுகளையும் வட்டம் முன்னிறுத்துவதில்லை. மனிதர்களின் நம்பிக்கைகளையும் சமூகத்தின் சிந்தனைகளையும் முன்னிறுத்துகிறது.
மனிதர்கள் அனைவரையும் சமூகத்தின் பிம்பங்களாகவே வட்டம் புரிந்துகொள்கிறது. நமது நம்பிக்கைகளும் சிந்தனைகளும் தான் நமது செயல்பாடுகளை தீர்மானிக்கிறது. ஆனால், நாம் வளர்க்கப்பட்ட விதமும் நமது சமூகச் சூழலும் தானே நமது நம்பிக்கைகளையும் சிந்தனைகளையும் தீர்மானிக்கிறது? நமது வீடும் உறவுகளும், நமது ஊரும் படிப்பும் நண்பர்களும், தொலைக்காட்சிகளும், கைப்பேசிகளும் இணைந்து தானே நமது சிந்தனைகளையும் தீர்மானித்துக் கொண்டிருக்கிறது?
மனித சிந்தனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளையும் சமூகச் சூழலையும் கருத்தில் கொள்ளாமல், தனி மனிதனை மட்டும் குறை கூறுவதும், குற்றவாளியாகப் பார்ப்பதும், மேம்பட்ட சமுதாயத்தின் கண்ணோட்டமாக இருக்காது. முழுமை எப்போதும் நமது பார்வைக்கு அப்பாற்பட்டது.
எனவே, வட்டம் மனிதர்களை குற்றவாளிகளாக முன்னிறுத்துவதில்லை. குற்றத்திற்குக் காரணமான நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்துகிறது. மனிதர்களின் மனமாற்றத்திற்காகச் செயல்படுகிறது. வட்டம், நிகழ்வுகளால் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதில்லை. நிகழ்வுகளுக்கான அடிப்படை காரணங்களையும் அவற்றின் விளைவுகளையும் விவாதிக்கிறது. நிகழ்வுகளின் மீதான சமூகக் கண்ணோட்டத்தை மாற்றியமைப்பதில் வட்டம் செயல்படுகிறது.
சிந்தனைகளைச் சிந்தனைகளால் வெல்ல வேண்டும். சிந்தனையாளரை வீழ்த்தி சிந்தனைகளை வீழ்த்தக்கூடாது. எனவே, வட்டம் முகமின்றி செயல்பட விரும்புகிறது.
சிந்தனைகள் உலகத்தை மாற்றும் வல்லமை படைத்தவை. ஆனால், சிந்தனைகளை வெளிப்படுத்தவும், அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதற்கும் சுதந்திரம் வேண்டும். இன்றைய உலகத்தில், மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சிந்தனைகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படுகிறது, மிதிக்கப்படுகிறது அல்லது அமைதியாக்கப்படுகிறது. அது மட்டுமல்லாது, உலகத்தை மாற்றக்கூடிய மிகச்சிறந்த சிந்தனைகள் அனைத்தும் சிந்தனையாளரைத் தந்திரமாகத் தோற்கடித்தோ, சிந்தனையாளரை வழிபாட்டு உருவமாக மாற்றியோ தோற்கடிக்கப்படுகின்றது.
தனி மனிதர்களைத் தோற்கடித்து, சிந்தனைகளைத் தோற்கடிக்கப்படுவதை வட்டம் விரும்பவில்லை. மேலும், வட்டம் சிந்தனைகளை மட்டுமே மையப்படுத்த விரும்புகிறது.
அதனால், வட்டம் முகமின்றி செயல்பட விரும்புகிறது. அடையாளம் இல்லாமல் செயல்படுவதென்பது மிகப்பெரிய ஆயுதம் என்பதால், வட்டம் எப்போதும் தனது பொறுப்பை உணர்ந்து செயல்படும்.
வட்டம் ஒரு வலைத்தளம் மட்டுமல்ல. வட்டம் என்பது ஒரு கனவும் கூட.
உலகில் ஏதோ தவறு இருப்பதாக நீங்கள் எப்போதாவது சிந்தித்து இருந்தால், உண்மைகளை உங்களுக்குத் தெரியப்படுத்தவும், உங்களை விழிப்படையச் செய்யவும் வட்டம் செயல்படுகிறது.
உலகத்தை மாற்ற வேண்டும் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்து இருந்தால், உங்களது சிந்தனைகளைத் தட்டி எழுப்பவும், உங்களை ஒன்றிணைக்கவும் வட்டம் செயல்படுகிறது.
வாருங்கள். நாம் அனைவரும் இணைந்து, நமக்காக கனவு காண்போம். உலகத்தை மாற்ற வேண்டும் என்ற நமது கனவை, நாமே நிறைவேற்றுவோம்.
மின்னஞ்சல் வழியாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் வட்டத்தில் இணையவும். உங்களுடைய நண்பர்களிடம் எங்களது படைப்புகளைத் தொடர்ச்சியாகப் பகிரவும். விழிப்படையவும் ஒன்றிணையவும் இணைந்திருப்போம், வட்டத்தில்.