செய்திகள் மற்றும் செய்தித்தாள்கள் வழியாக தானே தினமும் நம்மை சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என தெரிந்து கொள்கிறோம்; அரசியல் நிகழ்வுகள், கட்சியின் செயல்பாடுகள், அரசியல்வாதிகளின் பேட்டிகள், அரசாங்கத்தின் திட்டங்கள், நிர்வாகம், மக்கள் போராட்டங்கள் என அனைத்தையும் செய்திகள் தானே நமக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துகிறது என நினைக்கலாம்.
ஆனால், உலக நடப்புகளையும், நாட்டில் நடக்கும் உண்மை நிகழ்வுகளையும் மக்களாகிய நம்மிடம் தெரிவிப்பதற்காக தான் செய்திகள் வெளிவருகிறதா? நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை நம்மிடம் சேர்ப்பது தான் செய்தி ஊடகத்தின் நோக்கமாக இருக்கிறதா?
அரசின் செயல்பாடுகளையும், முடிவுகளையும், புதிய திட்டங்களையும் மக்கள் தெரிந்து கொள்வதற்காக தான் செய்திகள் ஒளிபரப்பப்படுகிறது என நாம் நம்புகிறோம். ஆனால், அரசாங்கத்தின் செயல்பாடுகளை நாம் முழுமையாக புரிந்துகொள்ள அவை உதவுகிறதா? அரசின் முடிவுகளுக்கு பின்னால் இருக்கும் மறைமுக காரணங்களை நாம் அறிந்துகொள்வதை அவை விரும்புகிறதா? அரசின் திட்டங்களால் உண்மையாக பயனடையப் போகும் நிறுவனங்களையும் மனிதர்களையும் பற்றி அவை நமக்கு தெரியப்படுத்துகிறதா?
கட்சிகளுக்கு இடையில் நடக்கும் விவாதங்களையும் குற்றச்சாட்டுகளையும் பரபரப்பாக ஒளிபரப்பும் ஊடகங்கள், கட்சிகள் இணைந்து செய்யும் மறைமுக நாடகங்களையும் மோசடிகளையும் வெளியிடுகிறதா? இல்லையெனில் ஏன் வெளியிடுவதில்லை? அவ்வப்போது நடக்கும் ஊழல்களை பற்றி பேசும் தலைப்பு செய்திகள் எப்போதும் எங்கேயும் நடந்து கொண்டிருக்கும் ஊழல்கள் பற்றி ஏன் வாய் திறப்பதில்லை?
அரசின் முடிவுகளையும் அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் பற்றி எப்போதும் பேசும் ஊடகங்கள், அரசு முடிவுகளில் மக்களாகிய நாம் எப்படி பங்களிக்க முடியும், நமக்கான வாய்ப்புகளும் உரிமைகளும் என்னென்ன? நமது குறைகளையும், கருத்துகளையும் எப்படி பதிவு செய்ய முடியும் என்பதை பற்றி ஏன் பேசுவதில்லை?
தொடர்ச்சியாக தலைப்பு செய்திகள் ஒளிபரப்பும் ஊடகங்கள், எந்த ஒரு செய்தியை பற்றியும் ஏன் தொடர்ச்சியாக பேசுவதில்லை? எந்த செய்தியையும் ஏன் பின் தொடர்வதில்லை? எந்த தகவல்களின் உண்மைத்தன்மையையும் ஏன் ஆராய்வதில்லை? அது போல, நாமும், அனைத்தையும் பேசிவிட்டு அடுத்தடுத்த செய்திகளுக்கு கடந்து செல்ல வேண்டும் என்று பழக்கப்படுத்துவதற்கு தானே?
அரசியல் விவாதங்கள் ஏதேனும், ஒற்றை செய்தியை எடுத்து கொண்டு, அனைத்து கருத்துக்களுக்கும் வாய்ப்பளித்து, அனைவரின் பார்வைகளையும் கவனத்தில் எடுத்து, நன்மை தீமைகளை அமைதியாக விவாதிக்கும் ஆரோக்கியமான உரையாடல்களாக இருக்கிறதா? இது மாதிரியான விவாதங்களும் குழப்பங்களும் தானே நமக்கு அரசியல் மீது சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது?
இந்த விவாதங்களால், அரசாங்க திட்டங்களிலும் முடிவுகளிலும் ஏதேனும் மாற்றங்கள் வந்துள்ளதா? இல்லையெனில், இது போலவே, நாமும் எவ்வித மாற்றத்திற்காகவும் செயல்புரியாமல் நம்முள் தொடர்ச்சியாக விவாதம் செய்ய வேண்டும் என்று பழக்கப்படுத்துவதற்கு தானே இவை ஒளிபரப்பப்படுகிறது?

அரசாங்கத்தின் சட்ட-திட்டங்களை நம்மிடம் திணிக்கும் செய்திகள், நமது கருத்துகளுக்கு மதிப்பளிக்கிகிறதா? நமது பார்வைகளை அரசாங்கத்தின் பார்வைக்கு எடுத்து செல்லும் கருவிகளாக செய்தி ஊடகங்கள் செயல்படுகிறதா? நாம் நினைக்கும் கருத்துகள் தான் செய்திகளாக வருகிறதா? இல்லை, செய்திகளாக வரும் கருத்துகளை தான் நாம் விவாதித்து கொண்டிருக்கிறோமா?
உண்மையான அரசியலை நம்மிடம் மறைத்து, தேவையற்ற குழப்பங்களில் நம்மை சிக்க வைத்து, அவர்கள் ஒளிபரப்பும் செய்திகளைப் பற்றி நம்மை வீண் விவாதம் செய்ய வைத்து, உண்மைகளில் இருந்து திசை திருப்பும் திட்டமிடப்பட்ட நாடகங்களாக தானே செய்திகள் உருவாக்கப்படுகிறது?
திருட்டு, கொலை, கொள்ளை, தற்கொலை, மோதல், மோசடி, வன்முறை, விபத்து, பலி போன்ற செய்திகளால் நாம் என்ன தெரிந்து கொள்கிறோம்? காதல், கள்ளக்காதல், கற்பழிப்பு, பலாத்காரம், பாலியல் கொடுமை போன்ற செய்திகளால் நாம் என்ன தெரிந்து கொள்கிறோம்? நடப்பதை தெரியப்படுத்துகிறார்களா? இல்லை, நடக்க வேண்டும் என்று தெரியப்படுத்துகிறார்களா? நடப்பதை தான் தெரியப்படுத்துகிறார்கள் என்றால் தெரியப்படுத்துவதால் தான் இவை அதிகமாக நடந்து கொண்டிருக்கிறதா? ஆக, நமது மனதிற்குள் பயத்தை திணிப்பதற்காகவும், நாம் எப்படி சிந்திக்க வேண்டும் என்று பழக்குவதற்காகவும் தானே, இது போன்ற செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது?
வானிலை தகவல்களை அக்கறையோடு பகிர்ந்துகொள்ளும் செய்திகள் மாறிவரும் பருவங்கள் பற்றியும், அதிகரித்து வரும் இயற்கை சீற்றங்கள் பற்றியும் இதற்கான உண்மையான காரணங்கள் பற்றியும் ஏன் பேசுவதில்லை?
நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் இது போன்ற அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து நம்மை திசை திருப்புவதற்காக தானே திரைப்பட செய்திகளும் விளையாட்டு செய்திகளும் ஒளிபரப்பப்படுகிறது?
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகளை மறைத்துவிட்டு, நமக்குள் இருக்கும் பிரச்சனைகளை அடையாளம் காணாமல், சிக்கல்களுக்கு காரணம் கண்டறியாமல், தீர்வுகளைப் பற்றி வழிமுறைகளை விவாதிக்காமல் எந்த செய்திகள் பார்த்தாலும், எத்தனை செய்தித்தாள்கள் படித்தாலும் நமக்கு என்ன பயன்?
அரசியல் கட்சிகளாலும் பெரு நிறுவனங்களாலும் தானே செய்தி ஊடகங்கள் நடத்தப்படுகிறது? அப்படி என்றால், அவர்களின் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப தானே அவை செயல்படும்? அப்படிப்பட்ட ஊடகங்களில் நமக்கு தேவையான செய்திகளும், சமூக மாற்றத்திற்கான உண்மைகளும் எப்படி ஒளிபரப்பாகும்?
தினமும் ஒரே செய்திகள், ஆண்டு முழுவதும் அதே செய்திகள், ஒவ்வொரு நிகழ்விற்கும், சுழற்சிக்கும் வெவ்வேறு வடிவத்தில், வெவ்வேறு வார்த்தைகளில் அதே செய்திகள். ஊரும், பெயரும், நாளும் மாறுபடுகிறது. ஆனாலும், நாம் தினமும் பரபரப்பாக புதிது போல் படித்து கொண்டிருக்கிறோம். நினைத்து பார்க்கையில் வேடிக்கையாக தான் இருக்கிறது. அனால், இது தானே உண்மை?
உண்மை அரசியலை நம்மிடம் இருந்து மறைத்து, அர்த்தமற்ற விவாதங்களால் நம்மை திசைதிருப்பி, நமக்கு அரசியல் தெரியும் என்றும், நமக்கு அரசியல் வேண்டாம் என்றும் நம்ப வைக்கும் செய்திகளின் சூழ்ச்சிகளை ஆழமாக புரிந்து கொண்டு, அப்படியான தேவையற்ற பரபரப்புகளில் இருந்து எப்போது நம்மை நாமே விடுவித்துக்கொள்ளப் போகிறோம்? இப்படியான சிந்தனைகளை தூண்டக்கூடிய கேள்விகளை எழுப்புவதற்கும், மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய உரையாடல்களில் பங்கெடுப்பதற்கும் வட்டத்தில் இணைந்திருங்கள். இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்களின் நட்பு வட்டங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள். வட்டத்தின் சமூக ஊடகப் பக்கங்களை பின்தொடருங்கள்






