நமது சுதந்திரப் போராட்ட வெற்றியை நினைத்து ஒவ்வொரு வருடமும் நம்முடைய சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் நம்முடைய நாடு சுதந்திரமாக இருக்கிறதா?
நமது நாட்டை வேறு நாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆட்சி புரிந்தார்கள்; நம்மை அடிமைப்படுத்தினார்கள்; ஆங்காங்கே தனித்தனியாகச் சிலர் எதிர்த்தார்கள்; அடிபணிய மறுத்தார்கள்; அவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்; மக்களாக நாம் ஒன்றிணைந்தோம்; போராடினோம்; வெற்றி பெற்றோம். அதனால், நாமும் நமது நாடும் சுதந்திரமாக இருக்கிறது என்று தானே நாம் அனைவரும் நம்பிக் கொண்டிருக்கிறோம்?
ஆனால், வேற்று நாட்டவர்கள் எதற்காக நம்மை அடிமைப்படுத்தினார்கள், எத்தனை ஆண்டுகளாக நம்மை ஆட்சி புரிந்தார்கள், நம்மிடம் இருந்து எதையெல்லாம் அபகரித்தார்கள், நம் மீது எவற்றை எல்லாம் திணித்தார்கள், நம்மை என்ன செய்தார்கள், உண்மையில், எதற்காக நமக்குச் சுதந்திரம் கொடுத்தார்கள் என்று நாம் எப்போதாவது சிந்தித்து இருக்கிறோமா?
நமது நாட்டின் இயற்கை வளங்களுக்காக ஆசைப்பட்டு, அவற்றைக் கொள்ளையடிப்பதற்காக தானே, நம்மை அடிமைப்படுத்தினார்கள்? நமது மக்களுடைய உழைப்பின் மூலமாகவே நமது நாட்டின் செல்வங்களைச் சுரண்டுவதற்காக தானே, நம்மை ஆட்சி புரிந்தார்கள்?
வேகமாக, தொடர்ச்சியாக, வசதியாக கொள்ளையடிப்பதற்காக தானே, வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரிலும், நமக்கான திட்டங்கள் என்ற போர்வையிலும் பல திட்டங்களை தொடங்கினார்கள்? அவர்களின் தேவைகளுக்காக நம்மை ஆட்சி செய்யும் போது, நம்மை நிர்வகிப்பதற்கான செலவுகளையும் நம்மிடம் இருந்தே பிடுங்குவதற்காக தானே, நமக்கு வரிகள் விதித்தார்கள்?
நமது மக்கள் தொகையை அவர்கள் மிகப்பெரும் சந்தை வாய்ப்பாக தானே பார்த்தார்கள்? நமது செல்வங்களையும் உழைப்பையும் பயன்படுத்தி உற்பத்தி செய்த பொருட்களை நம்மிடம் விற்று மறுபடியும் அவர்கள் லாபமடைய வேண்டும் என்று தானே, வெளிநாட்டு மோகத்தையும், வெள்ளைய மோகத்தையும் நம் மீது திணித்தார்கள்?
அவர்களின் வியாபாரத்திற்காக தானே, ஆங்கில மருத்துவத்தையும், நவீன வேளாண்மையையும் நம் மீது திணித்தார்கள்? அவர்களின் விற்பனைக்குத் தடையாக இருந்த காரணத்திற்காக தானே, நமது பாரம்பரிய மருத்துவ அறிவையும் வேளாண் முறைகளையும் அழித்தார்கள்?
அவர்களது மொழியைத் திணிப்பதற்கும், அவர்களது நம்பிக்கைகளை நமது மனங்களில் விதைப்பதற்கும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும், அவர்களுக்கு வேலை செய்வதற்கும் போதுமான அறிவையும் திறமைகளையும் வளர்ப்பதற்காக மட்டும் தானே, நமக்குக் கல்வி கற்றுக்கொடுத்தார்கள்?
அவர்கள் செய்ய நினைத்த வேலைகளை நம்மையே செய்ய வைப்பதற்காக மட்டும் தானே, நமக்கு வேலை கொடுத்தார்கள்? அவர்களைப் போலவே சிந்திக்கத் தொடங்கிய, செயல்படத் தொடங்கிய மனிதர்களுக்கு மட்டும் தானே பதவியும் பரிசும் கொடுத்தார்கள்? அவர்களது கட்டளைகளை அப்படியே செயல்படுத்துவதற்காக மட்டும் தானே, நமக்கு அதிகாரம் கொடுத்தார்கள்?

சுதந்திரத்திற்குப் பிறகு, வெள்ளையர்கள் நம் மீது திணித்த அனைத்தையும் உதறி தள்ளிவிட்டோமா? நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டதை எல்லாம் நமக்கு திருப்பிக் கொடுத்துவிட்டார்களா? எடுத்துக் கொண்டதை எல்லாம் தரவில்லை என்றாலும் பரவாயில்லை, நம்மிடம் இருந்து எடுப்பதையாவது நிறுத்திவிட்டார்களா?
இன்றும் நம் இயற்கை வளங்கள் அனைத்தும் சூறையாடப்பட்டு கொண்டிருக்கிறது தானே? நமது உழைப்பின் மூலமாகத் தானே, நம்மையும் நமது வளங்களையும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள்? இன்று திட்டமிடப்படும், செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் நமது வளங்களையும் நமது உழைப்பையும் வசதியாகவும் வேகமாகவும் உறிஞ்சுவதற்கு தானே? நம்முடைய நலன்களுக்காக இல்லாமல், நம்முடைய நிர்வாகத்திற்காக தானே இன்றும் கூட நாம் வரிகள் செலுத்திக் கொண்டிருக்கிறோம்?
இன்றும் நாம் ஆங்கில மோகத்திலும் வெளிநாட்டு மோகத்திலும் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இன்றும் நாம் உலகத்தின் மிகப்பெரிய சந்தையாக இருந்து வருகிறோம் தானே? மக்களின் உடல்நலனில் அக்கறை கொண்டிருந்த பாரம்பரிய வேளாண்மையை மறந்து வியாபாரத்தில் அக்கறை கொண்டுள்ள வேளாண் முறைகளைத் தானே பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்? நோயில்லாமல் வாழ உதவிய மருத்துவ அறிவை ஒதுக்கிவிட்டு வியாபாரத்தில் அக்கறை கொண்டுள்ள ஆங்கில மருத்துவத்தை மட்டும் தானே உண்மையென நம்பிக்கொண்டிருக்கிறோம்?
இன்றும் அவர்களுடைய மொழியையும் அவர்களுடைய அறிவியலின் வழியில் தானே கல்வி கற்றுக்கொண்டிருக்கிறோம்? அவர்களுக்காக வேலை பார்ப்பதற்குத் தேவையான திறமைகளை மட்டும் தானே நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம்? அவர்களுடைய விருப்பங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ நிறைவேற்றுவதற்காக தானே நாம் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம்? அவர்களுக்காக உழைப்பவர்களுக்கு மட்டும் தானே பணமும் பதவியும் கிடைத்துக் கொண்டிருக்கிறது? மேல் இடத்தில் இருந்து வரும் கட்டளைகளை அப்படியே செயல்படுத்துவதற்காக மட்டும் தானே, நம்முடைய அதிகாரங்கள் பயன்படுகிறது?
அவர்கள் செய்ய நினைத்த அனைத்தையும் செய்து முடித்துவிட்டு, அவர்கள் செய்து கொண்டிருந்த அனைத்தையும், நாம் செய்யத் தொடங்கும் வரை நம்மைப் பழக்கப்படுத்திவிட்டு, அவர்களாகவே நம்மை மாற்றிய பின்பு தானே, அவர்கள் நமக்குச் சுதந்திரம் தருவதாகச் சொன்னார்கள்?
வெள்ளையர்கள் நம்மை எப்படி ஆட்சி செய்தார்களோ, அதே மாதிரியாக நம்முள் சிலர், நம்மை ஆட்சி செய்வது தான் நமது நாட்டின் சுதந்திரமா? வெள்ளையர்கள் நம்மை என்னவாக மாற்றினார்களோ, அதே மாதிரியாகவே நாம் வாழ்ந்துகொண்டிருப்பது தான் நம்முடைய சுதந்திரமா?
இல்லை என்றால், நாம் உண்மையில் சுதந்திரமாக இருக்கிறோமா? இல்லை, சுதந்திரமாக இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறோமா?
நாம் சுதந்திரமாக இருப்பதால் நம்முடைய சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோமா? இல்லை, சுதந்திரப் போராட்டத்தையும், விடுதலை பெற்ற வரலாற்றையும் உணர்வுப்பூர்வமாக நம்மிடம் திணிப்பதற்காகவும், அதன் வழியாக, நாம் சுதந்திரமாக இருக்கிறோம் என்று நம்மை நம்ப வைப்பதற்காகவும் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறதா?
தொடர்ந்து இது போன்ற கேள்விகளை எழுப்புவதற்கும், மாற்றத்தை நோக்கி பயணிப்பதற்கான உரையாடல்களில் பங்கெடுப்பதற்கும் வட்டத்தில் இணைந்திருங்கள்.
இந்தப் படைப்பில் உண்மை இருக்கிறது என நீங்கள் நினைத்தால், உங்கள் நண்பர்களுக்கு அனுப்பும் சுதந்திர தின வாழ்த்துக்களில் இந்த பதிவைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.